ஏ.டி.எம்., கேமரா மீது மை அடித்து ரூ.30 லட்சம் அபேஸ்
ஏ.டி.எம்., கேமரா மீது மை அடித்து ரூ.30 லட்சம் அபேஸ்
ADDED : மார் 02, 2025 06:20 AM

ஹொஸ்கோட்: ஏ.டி.எம்.,மில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மீது 'ஸ்பிரே' மூலம் மையை அடித்து, இயந்திரத்தை உடைத்து, 30 லட்சம் ரூபாயை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நகரில் திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போலீசார் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும், திருடர்கள் புது ரூட்டில் ஈஸியாக பணத்தை அபகரித்துச் செல்கின்றனர்.
பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் பகுதியில் பல ஏ.டி.எம்.,கள் உள்ளன. ஹொஸ்கோட் சூலிபெலே பகுதியில் எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., உள்ளது. இப்பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாகவே காணப்படும்; காவலர்கள் யாரும் கிடையாது.
ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள், அந்த ஏ.டி.எம்.,மை குறிவைத்திருந்தனர்.
நேற்று காலையில் அந்த பகுதியில் உள்ள ஒருவர், ஏ.டி.எம்.,மிற்கு பணம் எடுக்க வந்துள்ளார். அங்கு ஏ.டி.எம்., உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சூலிபெலே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்தனர். ஏ.டி.எம்.,மில் கைரேகை நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தனர்.
நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ஆந்திர பதிவு எண் கொண்ட கறுப்பு காரில், மர்ம கும்பல் வந்தது. காரில் இருந்து ஒரு மர்ம நபர் இறங்குவது; அவர் கண் தவிர முகம் முழுதும் அடையாளம் தெரியாத அளவில் துணியால் மறைக்கப்பட்டிருந்தது. வேக வேகமாகஏ.டி.எம்.,முக்குள்நுழைவது; தன் கையில் வைத்திருந்த ஸ்பிரே கருவியால், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் மீது கறுப்பு மையை பூசியது வரையிலான காட்சிகள் தெரிந்தது.
அப்பகுதியில் உள்ள மற்றொரு கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், காரில் தப்பிச் சென்ற காட்சிகள் மட்டும்தெரிந்தது.
ஏ.டி.எம்., இயந்திரத்தை ஆயுதத்தால் வெட்டியதும், அதிலிருந்த பணத்தை கொள்ளை அடித்ததும் தெரியவில்லை. ஏ.டி.எம்.,மில் 30 லட்சம் ரூபாய் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், கொள்ளையர்கள் ஆந்திராவில் இருந்து வந்திருக்கலாம் என்ற ரீதியில் போலீசார் விசாரணையில் இறங்கினர்.