நிலச்சரிவில் இறந்த கன்னடர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
நிலச்சரிவில் இறந்த கன்னடர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
ADDED : ஆக 01, 2024 12:10 AM
பெங்களூரு : கேரளாவின், வயநாடில் நடந்த நிலச்சரிவில் கர்நாடகாவைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதல்வர் சித்தராமையா தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவின் அண்டை மாநிலமான கேரளாவின் வயநாட்டில், தொடர் மழை பெரும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தியது. நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஐ தாண்டி விட்டது. மேலும் பலர் மண்ணுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என, அஞ்சப்படுகிறது.
சாம்ராஜ் நகர், குண்டுலுபேட்டை சேர்ந்த அனில்குமார், தன் பெற்றோர், மனைவி ஜான்சிராணி, இரண்டை வயது மகன் நிஹாலுடன், வயநாட்டின் முண்டகை என்ற பகுதியில் உள்ள டீ எஸ்டேட் அருகில் வசிக்கிறார்.
இங்கு ஏற்பட்ட நிலச்சரிவில், அனில்குமாரின் தாயார் லீலாவதி, 55, மகன் நிஹாலும் காணாமல் போயுள்ளனர். அனில்குமார், அவரது மனைவி ஜான்சிராணி, தந்தை தேவராஜு காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர்.
அதேபோன்று, சூரல்கல் என்ற பகுதி நிலச்சரிவிலும், சாம்ராஜ் நகரைச் சேர்ந்த ராஜேந்திரா, ரத்னம்மா, புட்டசித்தஷெட்டி, 62, ராணி, 50, ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கேரளாவில் அபாயத்தில் சிக்கியுள்ள கன்னடர்களின் உதவிக்காக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாடை, முதல்வர் சித்தராமையா அனுப்பியுள்ளார். அதிகாரிகளுடன் சென்ற அமைச்சர் சந்தோஷ் லாட், நிலச்சரிவில் சிக்கியவர்களின் தகவலை கேட்டறிகிறார். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
நிவாரணப் பொருட்கள்
முதல்வர் சித்தராமையா, ஏற்கனவே கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆறுதல் கூறினார்.
'மீட்பு பணிகளில் கர்நாடக அரசு, தேவையான உதவிகளை செய்யும். மீட்புப் படையினர், நிவாரணப் பொருட்களை அனுப்புகிறோம்' என, உறுதி அளித்தார்.
கேரளாவின், வயநாடு நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, கர்நாடக அரசு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று முதல்வர் சித்தராமையா கூறியிருப்பதாவது:
கேரளாவின், வயநாடில் ஏற்பட்ட நிலச்சரிவால், இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த அசம்பாவிதத்தில் கன்னடர்களும் இறந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
இறந்தவர்களின் ஆத்மாவுக்கு, அமைதி கிடைக்க வேண்டும் என, பிரார்த்தனை செய்கிறேன். ஏற்கனவே மாநிலத்தின், இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், ராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் சந்தோஷ் லாடை, கேரளாவுக்கு அனுப்பியுள்ளேன். அபாயத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதே, எங்களின் குறிக்கோளாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, சாம்ராஜ் நகரில் சகாயவாணி உதவி மையம் திறந்துள்ளோம்.
அரசு தயார்
கர்நாடகாவின் எந்த இடத்தில் நிலச்சரிவு நடந்தாலும் எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.