அயோத்தி ராமர் கோவில் பாதையில் ரூ.50 லட்சம் மின்விளக்குகள் திருட்டு
அயோத்தி ராமர் கோவில் பாதையில் ரூ.50 லட்சம் மின்விளக்குகள் திருட்டு
ADDED : ஆக 15, 2024 02:35 AM

அயோத்தி, அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் வழியில், பலத்த பாதுகாப்புள்ள பக்தி பாதை மற்றும் ராமர் பாதைகளில் பொருத்தப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்விளக்குகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள பாலராமர் கோவிலில் கடந்த ஜனவரி 22ல் கும்பாபிஷேகம் நடந்தது. பலத்த பாதுகாப்புமிக்க இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் ராமர் பாதை மற்றும் பக்தி பாதைகள் உள்ளன.
இந்த பாதைகளில் ஏராளமான மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை பராமரிக்கும் பணி, 'யாஷ் என்டர்பிரைசஸ்' மற்றும் 'கிருஷ்ணா ஆட்டோமொபைல்ஸ்' நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த பாதைகளில் பொருத்தப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்விளக்குகள் திருடப்பட்டுள்ளதாக, ஒப்பந்ததார நிறுவனங்கள் சார்பில் சேகர் சர்மா என்பவர் ராம ஜென்ம பூமி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
ராமர் பாதையில் 6,400 மூங்கில் விளக்குகளும், பக்தி பாதையில் 96 புரொஜக்டர் விளக்குகளும் நிறுவப்பட்டிருந்த நிலையில், கடந்த மே 9ல் நடத்திய ஆய்வில், 3,800 மூங்கில் விளக்குகளும், 36 புரொஜக்டர் விளக்குகளும் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தன. மின்விளக்கு திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.