ADDED : ஜூன் 30, 2024 11:54 PM

மைசூரு: ''காங்கிரஸ் எம்.எல்.சி., யதீந்திரா மற்றும் அவரது குழுவினர் ஒத்துழைப்புடன், மைசூரு நகர மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், 5,000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர்,'' என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் குற்றம்சாட்டினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: காங்கிரஸ் எம்.எல்.சி., யதீந்திரா மற்றும் அவரது குழுவினர் ஒத்துழைப்புடன், எம்.யு.டி.ஏ., எனும் மைசூரு நகர மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், 5,000 கோடி ரூபாய் வசூல் செய்துஉள்ளனர்.
மக்கள் பிரதிநிதிகள் - அதிகாரிகள் புதிதாக சிண்டிகேட் அமைத்து, வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த முறைகேட்டில், எம்.எல்.ஏ., ஹரிஷ் கவுடா, எம்.யு.டி.ஏ., அதிகாரிகள் தினேஷ் குமார், ராகேஷ் பாப்பண்ணா, மாரி கவுடா, நடேஷ், ஏஜென்டுகள் உத்தம் கவுடா, மோகன், திரிசூல் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இவ்விவகாரம் வெளியில் வந்த பின், இன்று (நேற்று) பெங்களூரில் நகர்ப்புற மேம்பாட்டு துறை கமிஷனர், அமைச்சர் பைரதி சுரேஷ் அழைப்பின்படி, அதிகாரிகள் பெரிய சூட்கேசில், எம்.யு.டி.ஏ., கோப்புகளை பெங்களூருக்கு எடுத்து சென்றுள்ளனர். அங்கு இதை சரி செய்கிறார்களா என்று பார்க்கலாம்.
எம்.யு.டி.ஏ., கூட்டத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லை.
இது தொடர்பாக எம்.யு.டி.ஏ., கமிஷனருக்கு பல நாட்களுக்கு முன் கடிதம் எழுதப்பட்டது. இதுவரை பதில் வரவில்லை.
இதில், எம்.எல்.சி., மஞ்சே கவுடாவுக்கும் தொடர்பு உள்ளது. அவர் எம்.எல்.சி., அல்ல.
இந்த முறைகேடு விஷயத்தை, மாநில அரசின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவுக்கு ஒப்படைக்க கூடாது.
எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு அரசு ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.