ரூ.60 லட்சம் தங்க பாதுகை கர்நாடகா மடத்தில் திருட்டு
ரூ.60 லட்சம் தங்க பாதுகை கர்நாடகா மடத்தில் திருட்டு
ADDED : ஆக 24, 2024 12:05 AM

ஷிவமொகா : கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரபலமான மடத்தில், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க பாதுகைகள் திருடு போனதாக புகார் எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம், ஷிவமொகா பாள ஹொன்னுாரின் துங்கா - பத்ரா ஆறுகள் சங்கமமாகும் கொடலியில், சிருங்கேரி மஹா சமஸ்தான தக்ஷிணாமயி சாரதாம்பா மடம் உள்ளது. இதன் மடாதிபதியாக வித்யாபினவ வித்யாரண்ய பாரதி சுவாமிகள் உள்ளார்.
மடாதிபதிக்கு உடல்நிலை சரியில்லாததால், கடந்த எட்டு மாதங்களாக தாவணகெரே கிளை மடம் மற்றும் பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்தார்.
மடத்தில் சமீபத்தில் மஹோற்சவம் நடந்ததால், வித்யாரண்ய பாரதி சுவாமிகள், பாள ஹொன்னுாரு மடத்துக்கு வந்தார்.
அவரது முன்னிலையில், மடத்தின் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
மறுநாள் வங்கியில் செலுத்த வேண்டிய பணத்தை பீரோவில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதற்காக பீரோவை திறந்தபோது, பொருட்கள் குறைவாக இருப்பது தெரிந்தது.
உடனடியாக பீரோவில் வைத்திருந்த அனைத்து பொருட்களையும் சரி பார்த்தபோது, தங்க பாதுகைகள், வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரிந்தது. இவற்றின் மதிப்பு 60 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகும்.
இதுகுறித்து, மடத்தின் நிர்வாகி ரமேஷ் ஹுல்மனி, பாள ஹொன்னுாரு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.