மாநில அரசு துறை பெயரில் போலி கணக்கு வங்கி அதிகாரியின் ரூ.65 கோடி முடக்கம்
மாநில அரசு துறை பெயரில் போலி கணக்கு வங்கி அதிகாரியின் ரூ.65 கோடி முடக்கம்
ADDED : மார் 08, 2025 01:21 AM

கங்டாக்: அரசு துறை பெயரில் போலி வங்கிக் கணக்கு துவக்கி கோடிக்கணக்கில் ஊழல் செய்த முன்னாள் வங்கி பொது மேலாளரின் 65.46 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
வட கிழக்கு மாநிலமான சிக்கிமில் மாநில அரசின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக, 'சிக்கிம் ஸ்டேட் வங்கி' செயல்படுகிறது. 1968ல்,- துவங்கப்பட்ட இந்த வங்கி, சிக்கிம் மாநில அரசின் கருவூலத்தை கையாளும் பொறுப்பை மேற்கொள்கிறது.
இதன், பொது மேலாளராக இருந்த டோர்ஜி டிஷெரிங் லெப்சா, தன் பதவிக் காலத்தில் ஊழல் செய்து கோடிக்கணக்கில் சுருட்டியதாக புகார் எழுந்தது.
இந்த வழக்கை அமலாக்கத் துறை கையிலெடுத்ததும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. சிக்கிம் அரசின் சாலைகள் மற்றும் பாலங்கள் துறைகள் பெயரில், போலி வங்கிக் கணக்கை டோர்ஜி துவக்கினார்.
அதன்பின், இரண்டு பொதுத்துறை வங்கிகள் உடனான பரிவர்த்தனைகளுக்காக சிக்கிம் அரசு வைத்திருக்கும் ஆவணங்களை மோசடி செய்து, அரசு பணத்தை, தன் போலி கணக்கில் சட்ட விரோதமாக வரவு ஆகும்படி செய்தார்.
அந்த பணத்தை தன் தனிப்பட்ட வங்கிக் கணக்கு, தன் குடும்பத்தினர், கூட்டாளிகள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார். கடந்த மாதம் டோர்ஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய அதிரடி சோதனையில், இது தொடர்பான ஆவணங்கள் சிக்கின.
சிக்கிமை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த ஊழலில், டோர்ஜி மீது சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், அவரது 65.46 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்குவதாக அமலாக்கத் துறை நேற்று அறிவித்தது. அதன்படி, டோர்ஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் உள்ள 53.41 கோடி ரூபாய் முடக்கப்பட்டது.
மேலும், சிக்கிமின் டிரோரலி, சியாரி, ரானிபூல், பென்லாங் ஆகிய நகரங்களில் அவருக்கும், குடும்பத்தினருக்கும் சொந்தமாக உள்ள வீடுகள், நிலங்கள் முடக்கப்பட்டன.