ADDED : ஆக 24, 2024 01:48 AM
கலபுரகி, : கலபுரகி ஜெயதேவா அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக, 110 பேரிடம் 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த, மளிகை கடைக்காரர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கலபுரகி டவுனில் ஜெயதேவா இதய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இன்னும் இரண்டு மாதங்களில் மருத்துவமனை திறக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த மருத்துவமனையில், 'டி' குரூப் ஊழியர் வேலை வாங்கித் தருவதாக கூறி, சிலர் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபடுவதாக, கலபுரகி டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்படி மளிகை கடை நடத்தும் சந்தோஷ், அவரது உறவினர் ராஜசேகர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் வேலை வாங்கித் தருவதாக 110 பேரிடம் இருந்து 70 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.
இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளதால், அவர்களை போலீஸ் தேடி வருகின்றனர்.