குடும்ப தலைவியருக்கு ஆண்டுக்கு... ரூ.18,000! பா.ஜ., தேர்தல் அறிக்கையில் அசத்தல்
குடும்ப தலைவியருக்கு ஆண்டுக்கு... ரூ.18,000! பா.ஜ., தேர்தல் அறிக்கையில் அசத்தல்
UPDATED : செப் 07, 2024 05:33 AM
ADDED : செப் 07, 2024 01:51 AM

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வெளியிட்டார். அதில், குடும்பத் தலைவியருக்கு ஆண்டுக்கு 18,000 ரூபாய் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். மேலும், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது இனி எப்போதும் திரும்ப அளிக்கப்படாது என்றும் உறுதிபட தெரிவித் தார்.
ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட ஐந்தாண்டுகளுக்கு பின், முதல்முறையாக அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. வரும் 18, 25, அக்., 1 என, மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளது. இக்கட்சியின் தேர்தல் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
போராட்டம்
இந்நிலையில் பா.ஜ., வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஜம்முவில் நேற்று வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே, ஜம்மு - காஷ்மீர் பிரச்னை பா.ஜ.,வுக்கு முக்கியமானதாகவே இருந்து வருகிறது. இந்த பகுதியை இந்தியாவுடன் வைத்திருக்க நாங்கள் எப்போதும் முனைப்பு காட்டி வருகிறோம்.
பண்டிட் பிரேம் நாத் டோக்ராவின் போராட்டம் முதல், ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் தியாகம் வரை, இந்தப் போராட்டதை ஜனசங்கம் முதலில் முன்னெடுத்து சென்றது. அதன்பின், பா.ஜ., அதை தொடர்கிறது.
எனவே தான், ஜம்மு - காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இது எப்போதும் தொடரும். கடந்த 2014 வரை ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் தொடர் கதையாக இருந்தது. பல்வேறு தரப்பினரும் மாநில அமைதியை சீர்குலைத்து வந்தனர்.
இதற்கு முன் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் இதை சரிசெய்ய முயலாமல், தாஜா செய்யும் அரசியலில் ஆதாயம் தேடுவதிலேயே குறியாக இருந்தனர்.
ஆனால், 2014 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் ஜம்மு - காஷ்மீரின் வரலாறு மாற்றி எழுதப்பட்டது. இது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காலக்கட்டம். தேசிய மாநாட்டு கட்சியின் தேர்தல் அறிக்கையை வாசித்தேன். ஒரு அரசியல் கட்சி இப்படி ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடுவது எப்படி என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
காங்கிரஸ் போன்ற ஒரு தேசிய கட்சி அதை எப்படி நிபந்தனையின்றி ஆதரித்தது? அந்த தேர்தல் அறிக்கையை காங்., ஆதரிக்கிறதா என்பதை ராகுல் தெளிவுபடுத்த வேண்டும்.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது வரலாறாகிவிட்டது. அது, ஒருபோதும் மீண்டு வராது என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
சட்டப்பிரிவு 370, அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல. அது இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களையும், கற்களையும் அளித்து பயங்கரவாத பாதைக்கு திசை திருப்பியது.
இலவச சிலிண்டர்
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். வன்முறைக்கு காரணமானவர்களை பொறுப்பேற்க வைக்க வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
பயங்கரவாதம் உச்சத்தில் இருந்தபோது, காஷ்மீர் பண்டிட்கள், சீக்கியர்கள் தங்கள் சொத்துகளை அப்படியே விட்டுவிட்டும், நிர்ப்பந்தத்தின்படி விற்பனை செய்துவிட்டும் இங்கிருந்து வெளியேறினர்.
அவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர, வீட்டில் உள்ள மூத்த குடும்ப பெண் உறுப்பினருக்கு ஆண்டுக்கு 18,000 ரூபாய் உதவித் தொகை அளிக்கப்படும், ஆண்டுக்கு இரண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அளிக்கப்படும்.
கல்லுாரி மாணவ - மாணவியருக்கு ஆண்டுக்கு 3,000 ரூபாய் பயணப்படி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.