ADDED : ஆக 05, 2024 09:43 PM
பெங்களூரு : வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து, 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த தமிழகத்தின் மூவர் மீது, வழக்கு பதிவாகியுள்ளது.
பெங்களூரின், தனியார் நிறுவனத்தில் 50 வயது நபர் பணியாற்றுகிறார். இவருக்கு நண்பர் மூலமாக, 2021ல் தமிழகத்தின், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சண்முகராஜ், வைஷ்ணவி, ராஜேஷ் சிட்டி அறிமுகமாகினர். இவர்கள் நெல்லிக்குப்பத்தில் உள்ள எல்.ஐ.சி., நிறுவன கிளையில் பணியாற்றுகின்றனர்.
இந்நபரிடம் சண்முகராஜ், 'எங்களின் எல்.ஐ.சி., அலுவலகத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனக்கு பணம் கொடுத்தால், உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன். உங்களுக்கு மட்டுமின்றி, உங்களின் மனைவி, மாமன் மகள் உட்பட ஏழு பேருக்கு வேலை வாங்கி தர முடியும்' என ஆசை காண்பித்தார்.
இதை நம்பிய பெங்களூரின் ஊழியர், வேலை கிடைக்கும் என்ற ஆசையில், முதல் கட்டமாக தன் நண்பர் மூலமாக, 18 லட்சம் ரூபாய் கொடுத்தார். அதன்பின், 'கூகுள் பே, போன் பே' வழியாக, படிப்படியாக 40 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
பணம் கைக்கு கிடைத்த பின், சண்முகராஜ், பெங்களூரின் நபர் உட்பட பலரது, 'வாட்ஸாப்'பில், பணி நியமன கடிதங்களை அனுப்பினார். ஆனால் இந்த நியமன கடிதங்கள் போலியானது என்பது தெரிந்தது. சண்முகராஜை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால், அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
ஏமாந்ததை உணர்ந்த அந்நபர், பெங்களூரின் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசாரும், சண்முகராஜ், வைஷ்ணவி, ராஜேஷ் சிட்டி மீது வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவங்கியுள்ளனர்.