ரூ.5,000 கோடி! கல்யாண கர்நாடகா பகுதி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு: லோக்சபா தேர்தலில் கிடைத்த ஆதரவால் அரசு தாராளம்
ரூ.5,000 கோடி! கல்யாண கர்நாடகா பகுதி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு: லோக்சபா தேர்தலில் கிடைத்த ஆதரவால் அரசு தாராளம்
ADDED : ஜூன் 15, 2024 04:20 AM

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற, கல்யாண கர்நாடகா பகுதிகளின் வளர்ச்சிக்கு, ஆண்டுதோறும் பட்ஜெட்டில் 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், ஐந்து தொகுதிகள் கல்யாண கர்நாடகா எனும் ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகள் ஆகும். இது காங்கிரசுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.
கலபுரகியில் ராதாகிருஷ்ணா, ராய்ச்சூரில் குமார் நாயக், பீதரில் சாகர் கன்ட்ரே, கொப்பாலில் ராஜசேகர் பசவராஜ் ஹிட்னால், பல்லாரியில் துக்காராம் ஆகிய காங்., வேட்பாளர்கள், பா.ஜ.,விடம் இருந்து தொகுதிகளை தட்டி பறித்தனர்.
* மல்லிகார்ஜுன கார்கே
இதில், பல்லாரி தவிர, மற்ற நான்கு தொகுதிகளும் வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகள். இந்த வெற்றிக்கு, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஒரு உணர்வு பூர்வமான வார்த்தையும், காங்கிரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களுமே காரணம் என்று கூறப்படுகிறது.
கல்யாண கர்நாடகாவில் கிடைத்த வெற்றியால் தான், மாநில காங்கிரசுக்கு ஓரளவு நிம்மதி தந்தது என்று சொல்லலாம். எனவே அப்பகுதி மக்களுக்கு பரிசு அளிப்பதற்கு, ஆளுங்கட்சி முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக, அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடன், முதல்வர் சித்தராமையா, பெங்களூரில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
* 3 மணி நேரம்
அமைச்சர்கள் சரணபிரகாஷ் பாட்டீல், ரஹீம்கான், ஈஸ்வர் கன்ட்ரே, ஜமீர் அகமது கான், சரணபசப்பா தர்ஷனாபூர், போசராஜு, சிவராஜ் தங்கடகி, டி.சுதாகர், கல்யாண கர்நாடகா வளர்ச்சி ஆணைய தலைவர் அஜய்சிங், முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி, வளர்ச்சி ஆணையர் ஷாலினி ரஜ்னீஷ் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். வெவ்வேறு திட்டங்கள் அமல்படுத்துவது குறித்து, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
* அடிப்படை வசதி
கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
மனிதவள மேம்பாட்டை கருத்தில் கொண்டு, வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், தங்கும் விடுதிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். சாலை, குடிநீர், நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். உயர்நிலை பள்ளிகள், பி.யு.சி., கல்லுாரிகள், பட்டய கல்லுாரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்களின் சமூக நல நிதியை பயன்படுத்தி, அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த வேண்டும். கலபுரகி பல்கலைக்கழகத்தில், குறைவாக உள்ள பேராசிரியர்களின் எண்ணிக்கை நிரப்ப வேண்டும்.
* தடுப்பணைகள்
ஐந்து வாக்குறுதி திட்டங்களும் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கல்யாண கர்நாடகா வளர்ச்சி ஆணையத்தில், 2,885.90 கோடி ரூபாய் இருப்பு உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும்.
கல்யாண கர்நாடகா பகுதிகளின் வளர்ச்சிக்கு, ஆண்டுதோறும் பட்ஜெட்டில் 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அப்பகுதி மக்களின் பிரச்னைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வனத்தை அதிகப்படுத்துதல், சுத்தமான குடிநீர் வழங்கல், தடுப்பணைகள் கட்டுதல் என நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

