ADDED : மே 30, 2024 10:04 PM

மைசூரு, - சிவில் ஒப்பந்ததாரரின் நகைகள், வங்கி பாஸ் புத்தகம், கார் உட்பட பொருட்களை திரும்ப வழங்க, 50,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மகளிர் போலீஸ் எஸ்.ஐ.,யை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
மைசூரு கே.ஆர்., மொஹல்லாவை சேர்ந்தவர், சிவில் ஒப்பந்ததாரர் மகேஷ். 13ம் தேதி மைசூரு லோக் ஆயுக்தா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், 'வழக்கு ஒன்றில், என்னுடைய தங்க நகைகள், வங்கி பாஸ் புத்தகம், லாக்கர் சாவி, கார் உள்ளிட்ட பொருட்களை, குவெம்பு நகர் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பொருட்களை திரும்ப தருமாறு, போலீஸ் நிலைய எஸ்.ஐ., ராதாவிடம் முறையிட்டேன். அதற்கு அவர், சொத்துகளை திரும்ப தர வேண்டுமானால், 2 லட்சம் ரூபாய் தனக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்' என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, லோக் ஆயுக்தா போலீசாரின் ஆலோசனைப்படி, நேற்று காலை ராதாவிடம், முதல் கட்டமாக 50,000 ரூபாய் வழங்கினார். இதை வாங்கிய போது, அங்கிருந்த லோக் ஆயுக்தா போலீசார், ராதாவை கையும், களவுமாக பிடித்தனர்.
அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.