மாதம் ரூ.6,00,000 ஜீவனாம்சமா? பெண்ணுக்கு உயர் நீதிமன்றம் சூடு
மாதம் ரூ.6,00,000 ஜீவனாம்சமா? பெண்ணுக்கு உயர் நீதிமன்றம் சூடு
ADDED : ஆக 23, 2024 01:03 AM

பெங்களூரு, 'மனைவி ஆடம்பரமாக வாழ விரும்பினால், அவர் உழைத்து சம்பாதிக்க வேண்டும். முன்னாள் கணவரிடம் மாதந்தோறும் 6 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்பது சரியல்ல' என, கர்நாடக உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் வசித்தவர்கள் நரசிம்மா - ராதா முனு குண்ட்லா தம்பதி. மனம் ஒத்து போகாமல் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்; விவாகரத்தும் செய்து கொண்டனர்.
விவாகரத்து வழங்கிய குடும்ப நல நீதிமன்றம், ராதாவுக்கு கணவர் மாதம், 50,000 ரூபாய் ஜீவனாம்சமாக வழங்கும்படி உத்தரவிட்டது.
ஆனால், இந்த தொகை போதாது எனவும், மாதந்தோறும் 6 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் எனவும் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ராதா வழக்கு தொடர்ந்தார். நேற்று முன்தினம் மனு விசாரணைக்கு வந்தது.
மனைவி தரப்பு வக்கீல், 'என் கட்சிக்காரரின் முழங்கால் வலிக்கு பிசியோதெரபி சிகிச்சை பெறவும், மருந்துகள் வாங்கவும் மாதந்தோறும் 4 முதல் 5 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
'வளையல், பிராண்டட் உடைகள், செருப்பு போன்ற அடிப்படை தேவைகளுக்கு 50,000 ரூபாய், ஊட்டச்சத்தான உணவுக்கு 60,000 ரூபாய் தேவைப்படுகிறது. எனவே, மாதந்தோறும் 6,616,300 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்' என வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதி லலிதா கன்னகாந்தி பிறப்பித்த உத்தரவு:
இந்த வாதம் எனக்கு ஆச்சரியமளிக்கிறது. மாதந்தோறும் தனிநபர் செலவுக்கு 6,16,300 ரூபாய் வேண்டுமா? யாராவது இவ்வளவு ரூபாய் செலவிடுவரா? உங்கள் கட்சிக்காரருக்கு ஆடம்பரமாக செலவிட்டே ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால், அவரே பணம் சம்பாதிக்கட்டும். முன்னாள் கணவரிடம் கேட்கக் கூடாது.
மனைவிக்கு குடும்ப பொறுப்பும் இல்லை. தன் சொந்த செலவுக்கு இவ்வளவு பணம் கேட்கிறார். உண்மையில் இது அர்த்தமற்ற வாதம்.
ஜீவனாம்சம் என்பது, எந்த காரணத்துக்காகவும் தண்டனையாக மாறிவிட கூடாது. ராதா மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. பலரும் இதை பாராட்டியுள்ளனர். 'விவாகரத்துக்கு பின், மனைவி வாழ்க்கை நடத்த கணவர் ஓரளவு ஜீவனாம்சம் அளிப்பது கட்டாயம்.
'இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்திய பெண்ணுக்கு, நீதிபதி சரியான பாடத்தை புகட்டி விட்டார்' என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.