ரூ.831 கோடி போதைப்பொருள் குஜராத், மஹா.,வில் பறிமுதல்
ரூ.831 கோடி போதைப்பொருள் குஜராத், மஹா.,வில் பறிமுதல்
ADDED : ஆக 09, 2024 12:03 AM

ஆமதாபாத்: குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் நடத்திய சோதனையில், 831 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை சமீபத்தில் பறிமுதல் செய்தனர்.
குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படை டி.ஐ.ஜி., சுனில் ஜோஷி கூறியதாவது:
சூரத்தில் சமீபத்தில் மெபெட்ரோன் போதைப்பொருள் தயாரிப்பு கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தோம். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சிலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதன் அடிப்படையில், கடந்த 5ம் தேதி மஹாராஷ்டிராவின் பிவாண்டி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினோம்.
அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த முகமது யூனுஸ் ஷேக் மற்றும் அவரது சகோதரர் முகமது அடில் ஷேக் ஆகியோர் 800 கிராம் திரவ மெபெட்ரோன் தயாரித்து வைத்திருந்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 800 கோடி ரூபாய்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இரண்டு பேரும் சேர்ந்து எட்டு மாதங்களாக பல்வேறு ரசாயனங்களைப் பயன்படுத்தி மெபெட்ரோன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது.
மற்றொரு சோதனையில், போதைப்பொருள் தயாரித்து ஆப்ரிக்க நாட்டுக்கு அனுப்ப முயன்ற மருந்து நிறுவன அதிபர் மற்றும் மருந்து தயாரிப்பாளரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து 31 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.