ADDED : மார் 30, 2024 11:15 PM

காசர்கோடு: கேரளாவில் மதரசா ஆசிரியர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மூவரை நீதிமன்றம் விடுதலை செய்தது,
கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள சூரி பகுதியில், இஸ்லாமிய மத கல்வி போதிக்கும் மதரசா ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முகமது ரியாஸ் மவுலவி, 34.
இவர் அங்குள்ள மசூதியில், 2017ல் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். மசூதிக்குள் அத்துமீறி புகுந்த கும்பல், மவுலவியை கொலை செய்துவிட்டு தப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த அஜேஷ், நிதின், அகிலேஷ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை காசர்கோடு முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் விசாரித்து வந்தார். 97 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், குற்றம் சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மூவரையும் விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
