ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சி: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சி: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
ADDED : ஏப் 10, 2024 05:25 AM
வயாலிகாவல் : உகாதி பண்டிகையை ஒட்டி, பெங்களூரு வயாலிகாவலில் உள்ள, கர்னல் வசந்த் மைதானத்தில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நேற்று மாலை விளையாட்டுப் போட்டிகள் நடக்கவிருந்தன. இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன.
நேற்று மதியம், அந்த மைதானத்திற்குச் சென்ற, மல்லேஸ்வரம் காங்கிரஸ் பிரமுகர் அனுப் அய்யங்கார் தலைமையிலான காங்கிரஸ் தொண்டர்கள், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதுபற்றி அறிந்ததும் வயாலிகாவல் போலீசார் அங்கு சென்றனர்.
காங்கிரஸ் தொண்டர்களுடன் பேச்சு நடத்தினர். ஆனால் போலீசாருடனும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
“விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி வாங்கிவிட்டு, ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் ஹெக்டேவர் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறி, காவிக்கொடிகளை பறக்க விடுகின்றனர்.
''ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் விளையாட்டுப் போட்டிகளுக்கு, நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தேர்தல் விதிகளை மீறுவதால் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்,” என, அனுப் அய்யங்கார் கூறினார்.
'மாநகராட்சி அனுமதியுடன் ஹெக்டேவர் பிறந்தநாள் கொண்டாடுகிறோம்' என, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் கூறினர். இதனால் அனுப் அய்யங்கார் கடுப்பானார்.
அனுமதி கொடுத்த மாநகராட்சி அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, அரசிடம் கூறுவதாக சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதன்பின்னர் அங்கு நிலைமை சீரானது.

