ADDED : மார் 10, 2025 12:34 AM

மங்களூரு: மங்களூரு அருகே, மாயமான கல்லுாரி மாணவர் மீட்கப்பட்ட வழக்கில், தட்சிண கன்னடா எஸ்.பி., யதீஷ் விளக்கம் அளித்து உள்ளார். ''தேர்வு பயத்தால் வீட்டில் இருந்து மாணவர் வெளியேறினார்,'' என்று கூறி உள்ளார்.
தட்சிண கன்னடா எஸ்.பி., யதீஷ் நேற்று அளித்த பேட்டி:
மங்களூரு அருகே பரங்கிபேட்டை கிராமத்தை சேர்ந்த பி.யு., மாணவர் திகந்த், 17 மாயமான வழக்கில், அவரை கண்டுபிடிக்க, எனது தலைமையில் ஏழு தனிப்படை அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 நாட்கள் தேடுதலுக்கு பின், உடுப்பியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மீட்கப்பட்டார்.
முதலில் அவரிடம் விசாரித்த போது, ஒரு வித பயத்தில் இருந்தார். தன்னை யாரோ கடத்தி சென்றதாக கூறினார். அவரை சமாதானம் செய்தோம். பின், என்னை யாரும் கடத்தவில்லை. தேர்வுக்கு பயந்து நானே தான், வீட்டில் இருந்து வெளியே சென்றேன் என்று கூறினார்.
மொபைல் போன்
திகந்த் நன்கு படிக்கும் மாணவர். ஆனாலும் பி.யு., தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று, பெற்றோர், குடும்பத்தினரிடம் இருந்து அவருக்கு அழுத்தம் வந்து உள்ளது. இதனால் அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.
மொபைல் போனை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தார். கடந்த மாதம் 25 ம் தேதி ஹால் டிக்கெட் வாங்கிய பின், தேர்வை நினைத்து அவருக்கு பயம் வந்து உள்ளது. இதனால் எங்காவது சென்று விடலாம் என்று முடிவு எடுத்தார்.
கல்லுாரியில் இருந்து நேராக ரயில்வே தண்டவாளத்தை நோக்கி சென்றார். அவரது காலில் அடிபட்டு இருந்ததால், காயத்தில் இருந்து ரத்தம் வடிந்து உள்ளது. இதனால் செருப்பை கழற்றி, தண்டவாளத்தில் போட்டார். அந்த செருப்பை தான், போலீசார் மீட்டு இருந்தனர்.
மொபைல் போனையும் அங்கு வைத்துவிட்டு, அந்த வழியாக வந்த ஒருவருடன் பைக்கில் ஏறி, மங்களூரு சென்றார். கையில் அவரிடம் 500 ரூபாய் இருந்து உள்ளது.
ரூ.3,000 மங்களூரில் இருந்து ஷிவமொக்காவுக்கு பஸ்சில் சென்று உள்ளார். அங்கிருந்து மைசூரு சென்றார். மைசூரில் இருந்து பெங்களூருக்கு ரயிலில் சென்று உள்ளார். பின், நந்தி மலைக்கு சென்று அங்கு ஒரு ஹோட்டலில், மூன்று நாட்கள் வேலை செய்து 3,000 ரூபாய் சம்பாதித்தார். அந்த பணத்தில் பெங்களூரில் பல இடங்களை சுற்றிப் பார்த்து உள்ளார்.
கடந்த 7ம் தேதி இரவு பெங்களூரில் இருந்து முருடேஸ்வரா செல்லும் ரயிலில், மங்களூருக்கு பயணம் செய்தார். இந்த ரயில் செல்லும் பாதை, திகந்தின் வீட்டின் அருகில் தான் உள்ளது. நேற்று (முன்தினம்) காலை வீட்டின் அருகே ரயில் செல்லும் போது, ஜன்னல் வழியாக வீட்டை பார்த்து உள்ளார். போலீசார் வீட்டின் முன்பு நிற்பதையும், ட்ரோன் கேமராக்களை பறக்க விடுவதையும் பார்த்தபடி சென்று உள்ளார்.
அடுத்த நடவடிக்கை
மங்களூரில் இறங்கி அங்கிருந்து உடுப்பிக்கு பஸ்சில் சென்று உள்ளார். சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று, உடைகள் வாங்கும் போது, பாதுகாவலர் திகந்த்தை அடையாளம் கண்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்படி அங்கு சென்று போலீசார் மீட்டனர்.
தற்போது, அவரை மாவட்ட சிறுவர் பராமரிப்பு மையத்தில் தங்க வைத்து உள்ளோம். பெற்றோரையும் சந்திக்க அனுமதித்தோம். திகந்த்தை கண்டுபிடித்து தரும்படி அவரது தந்தை பத்மநாபா, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து உள்ளார்.
இதனால் திகந்த்தை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம். நீதிபதி உத்தரவின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.