ADDED : மார் 13, 2025 02:35 AM

சபரிமலை:பங்குனி மாத பூஜை களுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. 18 படிகளில் ஏறியதும் கொடி மரத்தின் இரண்டு பக்கங்கள் வழியாக பிரிந்து சென்று 25 முதல் 30 வினாடி நேரம் ஐயப்பனை தரிசிக்கும் புதிய பாதை திட்டம் அமலுக்கு வருகிறது.
நாளை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து விளக்கு ஏற்றுவார். தொடர்ந்து 18 படிகள் வழியாக வந்து ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்த பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
வழக்கமாக 18 படிகளில் ஏறியதும் கொடி மரத்துக்கு முன்பாக இடது பக்கம் திரும்பி சன்னிதானத்தை சுற்றி அமைந்துள்ள மேம்பாலம் வழியாக கோயிலில் வடக்கு பக்கம் இறங்கி வந்து தரிசனம் செய்ய வேண்டும். பக்கவாட்டு பாதையில் வருவதால் சரியாக தரிசனம் செய்ய முடியவில்லை என்ற புகார்கள் எழுந்தன. இதையடுத்து கூடுதல் நேரம் ஐயப்பனை தரிசிப்பதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டப்படி 18 படிகளில் ஏறியதும் கொடி மரத்தின் இரண்டு பக்கங்கள் வழியாக பிரிந்து சென்று இரண்டு வரிசையாக ஐயப்பனை பார்த்தவாறு நடந்து செல்ல முடியும். 25 முதல் 30 வினாடிகள் வரை தரிசித்தபடி கடந்து செல்லலாம். சோதனை அடிப்படையில் நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. இது வெற்றியடையும் பட்சத்தில் வரும் சீசனிலும் தொடரும் என தேவசம்போர்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
நாளை மாலை நடை திறந்த பின்னர் விசேஷ பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்து நெய் அபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
தினமும் களபாபிசேகம், கலசாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். மார்ச் 19ல் சகஸ்ர கலச பூஜை நடைபெறும் .அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆன்லைன் பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.