காங்.,கில் சேர மறுத்த சதானந்த கவுடா பா.ஜ., தலைவர் மீது திடீர் பாய்ச்சல்
காங்.,கில் சேர மறுத்த சதானந்த கவுடா பா.ஜ., தலைவர் மீது திடீர் பாய்ச்சல்
ADDED : மார் 22, 2024 05:44 AM

பெங்களூரு: ''காங்கிரசில் இருந்து எனக்கு, அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால் நான் அந்த கட்சிக்கு செல்ல மாட்டேன். பா.ஜ.,வை சுத்தப்படுத்துவதே என் குறிக்கோள், என பா.ஜ., - எம்.பி., சதானந்த கவுடா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
நான் தேர்தலில் போட்டியிடவில்லை என, பின் வாங்கினேன். ஆனால் மீண்டும் தேர்தலில் களமிறங்க வேண்டும் என, முன்னாள் முதல்வர்கள் உட்பட பலரும் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். நான் என்ன முடிவு எடுப்பேன் என, அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
சதானந்த கவுடாவுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட, ஆசை துளிர்விட்டதாக பலரும் கூறினர். தற்போது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன். சீட் கை நழுவியதால் எனக்கு வருத்தம் ஏற்பட்டது உண்மைதான். என்னை அழைத்து பேசினர். வேறு தொகுதியில் களமிறங்குங்கள். உங்களை வெற்றி பெற வைப்பதாக கூறினர்.
கட்சி எனக்கு அனைத்தையும் கொடுத்தது. தற்போது நான் கட்சிக்கு கொடுக்க வேண்டும். கட்சி பொறுப்பை ஏற்றவர், ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார். குடும்பத்தில் ஒன்றியுள்ளார். இதை சுட்டிக்காண்பிக்க சிலருக்கு தைரியம் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி கூறியதை போன்று, 'என் நாடு, என் குடும்பம்' என்ற சூழ்நிலை உருவாக வேண்டும்.
பா.ஜ.,வை வளர்த்தவர்களுக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில், ம.ஜ.த., இணைந்துள்ளது. இந்த கட்சி வந்துள்ளது என்பதற்காக, பா.ஜ.,வுக்காக உழைத்தவர்களை ஓரங்கட்ட கூடாது.
காங்கிரசில் இருந்து எனக்கு, அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால் நான் அந்த கட்சிக்கு செல்ல மாட்டேன். பா.ஜ.,வை சுத்தப்படுத்துவதே என் குறிக்கோள். வரும் நாட்களில் இதற்கான முயற்சிகளை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

