சுதந்திர தினத்தை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் பாதுகாப்பு வளையம்! முக அடையாளம் கண்டறியும் கேமராக்கள் அமைப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் பாதுகாப்பு வளையம்! முக அடையாளம் கண்டறியும் கேமராக்கள் அமைப்பு
UPDATED : ஆக 09, 2026 08:58 PM
ADDED : ஆக 09, 2026 08:32 PM

புதுடில்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலீசார், கமாண்டோ படைகள் மற்றும் முகம், வாகன எண் கண்டறிதல் கேமராக்கள் போன்ற மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
நாட்டின், 80வது சுதந்திர தினம் வரும் 15ல் நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. அன்று, டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுவார். இதில் ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பர். இதனால், அப்பகுதி முழுமையாக பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பாதுகாப்பு திட்டம், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு என, இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 முதல் 8 வரை, 'சுதர்ஷன் சக்தி- 5' என்ற பெயரில், 18 மணி நேர கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி நடத்தப்பட்டது.
டில்லி போலீஸ், ராணுவம், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பல பிரிவினர் இதில் பங்கேற்றனர். செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒருங்கிணைந்த செயல்திறன் சோதிக்கப்பட்டது.
'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக, ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், குற்றப் பின்னணி கொண்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதாகக் கூறப்படும் நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தன்று, 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த குழுவில் டில்லி போலீஸ், போக்குவரத்து பிரிவு, உள்ளூர் போலீசார், போலீஸ் கட்டுப்பாட்டு அறை சிறப்பு பிரிவினர், சிறப்பு அணிகள் உள்ளிட்டோர் அடங்குவர். இது தவிர துணை ராணுவப்படைகள், என்.எஸ்.ஜி., கமாண்டோ படைகள், துப்பாக்கிச் சுடும் வீரர்களும் பாதுகாப்பு பணியில் இருப்பர்.
முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்
* செங்கோட்டை மற்றும் சுற்றுப்புறங்களில், 1,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் முகம் கண்டறியும் தொழில்நுட்பமும், வாகன எண்களை கண்டறியும் தொழில்நுட்பமும் இருக்கும்
* செங்கோட்டை பகுதியை கண்காணிப்பதற்கு என்றே பிரத்யேக கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு உள்ளது. அதில் இருந்து, 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது
* 'அபிக்யான்' செயலி மூலம் விரைவான அடையாள சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த செயலி குற்றப்பதிவுகள் தரவுதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
* ஆக., 15ல் செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பட்டம் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது
* ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தலை தடுக்க, ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் தயார் நிலையில் உள்ளன
* செங்கோட்டையின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் விரைவு நடவடிக்கை குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும்
* கண்காணிப்பு கோபுரங்கள் வழியாகவும் நிலைமைகள் கண்காணிப்படும்
* கூட்ட நெரிசல் போன்ற அவசரநிலைகளை சமாளிக்க, என்.டி.ஆர்.எப்., எனப்படும் தேசிய பேரிடர் மீட்பு படையும் தயார் நிலையில் உள்ளது
* சமூக வலைதளங்களிலும் சந்தேக செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
