கர்நாடகாவின் முதல் பெண் தொழிலதிபர் பெங்களூருக்கு காபியை அறிமுகம் செய்த சாக்கம்மா!
கர்நாடகாவின் முதல் பெண் தொழிலதிபர் பெங்களூருக்கு காபியை அறிமுகம் செய்த சாக்கம்மா!
ADDED : மே 26, 2024 06:31 AM

சூடான காபியை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. பெரும்பாலானோர் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஒன்றியுள்ளது. இத்தகைய காபியை பெங்களூருக்கு அறிமுகம் செய்தது, ஒரு பெண் தொழிலதிபர் என்பது, பலருக்கும் தெரியாது.
தினமும் பொழுது விடிந்ததும், என்ன செய்கிறார்களோ, இல்லையோ காபி குடிக்க மறப்பதில்லை. காபியில் இருந்தே, பலரின் தினசரி துவங்குகிறது.
புத்துணர்ச்சி
குறிப்பாக சூடான காபியை சிறிது சிறிதாக ரசித்து குடித்தபடி, நாளிதழ் படிப்பதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். தலைவலி ஏற்பட்டாலோ, மனம் வருத்தமாக, சோர்வாக இருந்தாலோ, காபியை தான் நாடுவர். சூடான காபி குடித்தால், தலைவலி பறந்து போகும், உடல் புத்துணர்ச்சி பெறும் என்பது, அனுபவம்.
காபி உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் கர்நாடகாவின் பங்களிப்பு அதிகம். சிக்கமகளூரு, குடகு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில், 70 சதவீதம் காபி விளைகிறது. 1670ம் ஆண்டில் சிக்கமகளூரு அருகில், பாபா புடன் கிரியில் தான் நம் நாட்டிலேயே முதன் முறையாக காபி பயிரிடப்பட்டது.
காபி கொட்டையை, இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது, சூபி செயின்ட் பாபா புடன் என்பது, அனைவருக்கும் தெரியும். ஆனால் பெங்களூருக்கு அறிமுகம் செய்தது, ஒரு பெண் தொழிலதிபர். துமகூரில் பிறந்து, பெங்களூரில் வளர்ந்து, குடகு மருமகளான தொட்டமனே சாக்கம்மா. காபி கொட்டையை, பெங்களூருக்கு கொண்டு வந்து, அரைக்கும் ஆலை நிறுவி, வீடு வீடாக காபி பொடி விற்றவர் தொட்டமனே சாக்கம்மா.
அதிக ஆர்வம்
கர்நாடகாவின், முதல் பெண் தொழிலதிபர் என்ற பெருமை, இவரையே சாரும்.
துமகூரின், பிதரே என்ற ஊரில் 1880ல் பிறந்த சாக்கம்மா, நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் பிழைப்புத் தேடி, பெங்களூருக்கு வந்து வசிக்க துவங்கியது. சிறு வயதில் படிப்பில் சாக்கம்மா அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
இதை உணர்ந்த பெற்றோர், வறுமையிலும், இவரை, அன்றைய மெட்ரிகுலேஷன் வரை படிக்க வைத்தனர். அந்த காலத்திலேயே நடுநிலை கல்வி பெற்ற, சில சிறுமியரில் சாக்கம்மாவும் ஒருவர்.
திருமணம்
அந்த காலத்தில், இவரது சமுதாயத்தின் இளம் பெண்கள், பண்டிகை நாட்களில், தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று, கடவுள் பாடல்களை பாடும் சம்பிரதாயம் இருந்தது. இதுபோன்று ஒருநாள், தன் தோழிகளுடன் பாட சென்றிருந்தார்.
அப்போது இவரை பார்த்த தொட்டமனே சிக்கபசப்பா, திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். மிகவும் செல்வந்தரான இவர், குடகில் மிகப்பெரிய காபி தோட்ட அதிபராக இருந்தார்.
சிக்கபசப்பாவுக்கு ஏற்கனவே இரண்டு மனைவியர் இருந்தனர். ஆனால் குழந்தை இல்லை. இவர் சாக்கம்மாவை மணமுடிக்க விரும்பினார். வறுமை காரணமாக வயதில் மிகவும் பெரியவராக இருந்தும், சிக்கபசப்பாவுக்கு சாக்கம்மாவை பெற்றோர் திருமணம் செய்து கொடுத்தனர்.
நிர்வகிக்கும் பொறுப்பு
தன் 16வது வயதில் திருமணம் செய்து கொண்டு, சிக்கபசப்பாவின் மூன்றாவது மனைவியாக, குடகுக்கு வந்தார்.
திருமணமான இரண்டே ஆண்டுகளில், சிக்கபசப்பா காலமானார். அவரது முதலாவது, இரண்டாவது மனைவியரும் அடுத்தடுத்து காலமாகினர். இதனால் குடும்பம், விவசாயம், தொழிலை நிர்வகிக்கும் பொறுப்பு, சாக்கம்மாவின் தோளில் விழுந்தது.
புகழ்
அன்றைய பிரிட்டிஷர்கள் காலத்திலேயே, இவரது குடும்பத்தினருக்கு நுாற்றுக்கணக்கான ஏக்கர் காபி தோட்டம் இருந்தது. மிகவும் அறிவாளியாக இருந்த சாக்கம்மா, காபி விளைச்சல் அதிகரிக்க காரணமாக இருந்தார். இதை விற்பனை செய்யவும், திட்டங்களை செயல்படுத்தினார்.
காபி உற்பத்தி தொழிலில், ஏற்றம், இறக்கம் இருப்பதை அறிந்த அவர், பெங்களூரு, பசவனகுடியின், புல் டெம்பிள் சாலையில் 1920ல், முதன் முறையாக காபி கியூரிங் மற்றும் பவுடரிங் தொழிற்சாலை அமைத்தார்.
அன்றைய காலத்தில் இந்தியாவில், காபி அரைக்கும் இயந்திரங்கள் இல்லை. எனவே இங்கிலாந்தில் இருந்து, இயந்திரங்களை இறக்குமதி செய்தார். பெங்களூருக்கு காபியை அறிமுகம் செய்த பெருமையும், இவரையே சாரும்.
'சாக்கம்மாஸ் காபி ஒர்க்ஸ்' தொழிற்சாலை ஆரம்பித்து, கர்நாடகாவின் முதல் பெண் தொழிலதிபர் என, பெயர் பெற்றார். சாக்கம்மாஸ் காபி பொடி, வெகு விரைவில் பெங்களூரு மக்களின் மனதை கவர்ந்தது. 'காபி பொடி சாக்கம்மா' என்ற பெயர் ஏற்பட்டது. பலரும் இவரது தொழிற்சாலையில் இருந்து, காபி பொடி வாங்கி, நகரின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்தனர்.
உதவி
கன்னடத்தின் பிரபல எழுத்தாளர்களான மாஸ்தி வெங்கடேஷ அய்யங்கார், டி.வி.குண்டப்பா தங்களின் படைப்புகளில் சாக்கம்மாவின் காபியை பற்றி புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் பிரிட்டிஷார்களுடன் ஒருங்கிணைந்து, காபியை படகில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்.
சாக்கம்மா வெற்றிகரமான தொழிலதிபர் மட்டுமல்ல, சமூக சேவகியாகவும் இருந்தார். அன்றைய மைசூர் அரசு, தொழில் வளர்ச்சிக்காக கமிட்டி அமைத்து, அதற்கு சாக்கம்மாவை தலைவியாக நியமித்தது. கமிட்டி மூலமாக பல தொழிற்சாலைகள், நீர்ப்பாசனங்களுக்கு உதவி செய்தார்.
ஜுவல் ஆப் இந்தியா
திருமணமாகி இரண்டே ஆண்டுகளில், கணவரை இழந்த சாக்கம்மாவுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் அந்த காலத்திலேயே, நுாற்றுக்கணக்கான ஏழை குழந்தைகளின் கல்விக்கு தேவையான வசதிகளை செய்தார்.
மாணவர்களுக்காக விஸ்வேஸ்வரபுரத்தில் தங்கும் விடுதி கட்டினார். பல தானம், தர்மங்களை செய்தார். பசவனகுடியில் காபி கியூரிங் தொழிற்சாலை நடத்தப்பட்ட இடம், இப்போதும் சாக்கம்மா கார்டன் என, அழைக்கப்படுகிறது.
தொழில் வளர்ச்சி மற்றும் சமூக நலனுக்காக இவர் செய்த சேவையை, அடையாளம் கண்டு மைசூர் மஹாராஜா கிருஷ்ணராஜ உடையார், சாக்கம்மாவுக்கு 'லோக்சேவா நாராயணி' என்ற பட்டம் வழங்கி கவுரவித்தார். பிரிட்டிஷார்கள், 'ஜுவல் ஆப் இந்தியா - JEWEL OF INDiA' என்ற பதக்கம் அளித்தது.
மிரட்டல்
தொழிலதிபராக கர்நாடகாவின் காபிக்கு, சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்க செய்த சாக்கம்மா, 1928ல் மைசூர் பிரதிநிதிகள் கூட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமை பெற்றவர்.
கடந்த 1934ல் மகாத்மா காந்தி, குடகுக்கு வருகை தந்தார். அப்போது வினோத் சிவப்பா அஜ்ஜி பசவேஸ்வரா சாலையில் உள்ள, தொட்டமனே சாக்கம்மா வீட்டில் தங்கவைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையறிந்த பிரிட்டிஷார், 'காந்தியை உங்கள் வீட்டில் தங்க வைத்தால், உங்களிடம் நாங்கள் காபியை வாங்கமாட்டோம். உங்கள் தொழிலுக்கு ஒத்துழைக்க மாட்டோம்' என மிரட்டினர். எனவே தன் வீட்டில் காந்தியை தங்கவைத்து, உபசரிக்க சாக்கம்மா மறுத்ததாக கூறப்படுகிறது.
ரகசியம்
இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பேளூரு அருகில் உள்ள, குரப்பா என்பவரின் வீட்டில், காந்தி தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர். காந்தி வருகை தந்த அபூர்வமான நொடிக்கு, ஒரே சாட்சியாக இருந்த குரப்பாவின் மனைவி கங்கம்மா, 101, அதே வீட்டில் 2015ல் காலமானார்.
குரப்பா, சக்லேஸ்புரா தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த சிவப்பாவின் சகோதரர். காந்தி, பேளூரில் குரப்பாவின் வீட்டில் தங்கியிருந்ததை, ரகசியமாக வைத்திருந்தனர். எனவே இந்த தகவல், அரசு ஆவணங்களில் பதிவாகாமல் போனது
.
- நமது நிருபர் -