போதை மாத்திரைகள் விற்பனை; அம்பலப்படுத்திய நடிகர் விஜய்
போதை மாத்திரைகள் விற்பனை; அம்பலப்படுத்திய நடிகர் விஜய்
ADDED : ஆக 16, 2024 10:56 PM

பெங்களூரு : நடிகர் 'துனியா' விஜய் இயக்கி, நடித்த 'பீமா' சமீபத்தில் திரைக்கு வந்து, வசூலை அள்ளுகிறது. போதை பொருள் மாபியா சம்பந்தப்பட்ட கதையாகும். சமுதாயத்தில் போதைப் பொருட்களால் எந்த விதமான பாதிப்பு ஏற்படுகிறது என்பதை குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதையாகும்.
இவர், தன் நண்பர்களுடன், பெங்களூரின் பல இடங்களுக்கு காரில் சுற்றி வந்தார். தன்னுடன் இருந்த சிறுவனை மருந்து கடைக்கு அனுப்பி, போதைப் பொருள் கலந்த, 'டைடல்' என்ற மாத்திரையை வாங்கி வரும்படி கூறினார். சிறுவனும் அங்கு சென்று மாத்திரை கேட்டதும், கடையில் இருந்த பெண், டாக்டர் எழுதி கொடுத்த சீட்டு சிறுவனிடம் உள்ளதா என்பதை கேட்காமல், மாத்திரையை கொடுத்து அனுப்பினார்.
இதேபோன்று, இரண்டு மருந்து கடைகளில் சீட்டு கேட்காமல், மாத்திரை கொடுத்ததை துனியா விஜய், வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல், இரண்டு மருந்து கடைகளில் டைடல் மாத்திரைகளை கொடுத்தனர். இந்த மாத்திரை, டாக்டர்கள் அறுவை சிகிச்சையின் போது, நோயாளிகளுக்கு நிர்ணயித்த அளவில் கொடுப்பர். ஆனால், இதை அறுவை சிகிச்சை தேவைப்படாதவர்கள் உட்கொண்டால், உடலில் பின் விளைவுகள் ஏற்படும்.
பெங்களூரின் பல இடங்களில், சுற்றி வந்து, 'ஸ்டிங் ஆப்பரேஷன்' நடத்தி கண்டுபிடித்தோம். யாருக்கு வேண்டுமானாலும் போதைப்பொருள் எளிதாக கிடைக்கிறது. இளம் தலைமுறையினரை, போதைப்பொருள் பாழாக்குகிறது. நோய்களுக்கு ஆளாக்குகிறது. இது குறித்து, நடவடிக்கை எடுக்கும்படி, நகர கமிஷனரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

