தேர்தல் விதிமுறைகள் முடிந்த பின் பி.டி.ஏ., வில்லாக்கள் விற்பனை
தேர்தல் விதிமுறைகள் முடிந்த பின் பி.டி.ஏ., வில்லாக்கள் விற்பனை
ADDED : மே 04, 2024 11:07 PM
பெங்களூரு: லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் நீக்கப்பட்ட பின், ஹுன்னகெரேவில் கட்டியுள்ள வில்லாக்களை விற்பனை செய்ய, பெங்களூரு வளர்ச்சி ஆணையம் முடிவு செய்துள்ளது.
பெங்களூரின், ஹுன்னகெரேவில் 271.46 கோடி ரூபாய் செலவில், 31 ஏக்கர் பரப்பளவில் வில்லாக்கள் கட்டும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் பி.டி.ஏ., ஒப்படைத்தது. 2023 மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் பல காரணங்களால் பணிகள் தாமதமாகின.
இதற்கிடையில் சட்டசபை தேர்தல் வந்ததால், வில்லாக்களை விற்பனை செய்ய முடியவில்லை. அதன்பின் வில்லாக்களை விற்க தயாரான நிலையில், லோக்சபா தேர்தல் வந்தது. தேர்தல் முடிந்த பின் வில்லாக்களை விற்க பி.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, பி.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
வில்லாக்கள் மட்டுமின்றி, ஏழைகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளை, பி.டி.ஏ., கட்டியுள்ளது.
மூன்று படுக்கை அறைகள் கொண்ட 152 வில்லாக்கள் உள்ளன. இவற்றின் விலை 73 லட்சம் ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு படுக்கை அறைகள் கொண்ட வில்லாக்களின் விலை, 1.10 கோடி ரூபாய்.
ஏழைகளுக்காக ஒரு படுக்கை அறை கொண்ட, 320 பிளாட்டுகள் உள்ளன. ஒரு பிளாட்டின் விலை 13.50 லட்சம் ரூபாயாகும். தேர்தல் விதிமுறை ஜூன் 7ல், முடிவுக்கு வரும். அதன்பின் ஹுன்னகெரே வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்யப்படும்.
வில்லாக்களை கட்டும் போதே, பலரும் பார்வையிட்டனர். இவற்றை வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கின்றனர்.
வில்லாக்கள் விற்று கிடைக்கும் வருவாய், புதிய திட்டத்துக்கு பி.டி.ஏ., பயன்படுத்தும். வில்லாக்கள் வாஸ்து முறைப்படி கட்டப்பட்டுள்ளன. கார் பார்க்கிங் உட்பட, அனைத்து வசதிகளும் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.