அவுரங்கசீப்பை புகழ்ந்த சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,; மஹாராஷ்டிரா சட்டசபையில் கொந்தளிப்பு
அவுரங்கசீப்பை புகழ்ந்த சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,; மஹாராஷ்டிரா சட்டசபையில் கொந்தளிப்பு
ADDED : மார் 05, 2025 04:25 AM

மும்பை; மஹாராஷ்டிராவில், முகலாய ஆட்சியாளர் அவுங்கசீப்பை புகழ்ந்து பேசிய சமாஜ்வாதி எம்.எல்.ஏ., அபு அசிம் அஸ்மியை 'சஸ்பெண்ட்' செய்யக் கோரி, ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுதும் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
சிறந்த நிர்வாகி
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து, சட்டசபையில் இருந்து வெளியே வந்த மும்பையில் உள்ள மன்குர்த் சிவாஜி நகர் தொகுதியின் சமாஜ்வாதி எம்.எல்.ஏ., அபு அசிம் அஸ்மி, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவுரங்கசீப் உடன், ராகுலை அசாம் முதல்வர் ஹமிந்த பிஸ்வ சர்மா ஒப்பிட்டது குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அபு அசிம் அஸ்மி, 'அவுரங்கசீப் சிறந்த நிர்வாகி. அவரது தலைமையில் நாடு சிறப்பாக வளர்ச்சி அடைந்தது' என்றார்.
போராட்டம்
இது, மஹாராஷ்டிர அரசியலில் புயலைக் கிளப்பியது. அவருக்கு எதிராக, மஹாராஷ்டிரா முழுதும் ஆளும் கூட்டணி சார்பில் போராட்டம் நடந்தது. இந்த விவகாரம், நேற்று சட்டசபையிலும் எதிரொலித்தது.
நேற்று காலை சட்டசபை கூடியதும், ஆளும் பா.ஜ., - சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள், சமாஜ்வாதி எம்.எல்.ஏ., அபு அசிம் அஸ்மி மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து அபு அசிம் அஸ்மியை சஸ்பெண்ட் செய்து, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் சபை பலமுறை ஒத்தி வைக்கப்பட்டு, பின், நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, அபு அசிம் அஸ்மி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, தானே போலீசில் சிவசேனா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவுரங்கசீப் உடன் ராகுலை, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஒப்பிட்டது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தேன். வரலாற்று ஆசிரியர்கள் புத்தகத்தில் எழுதியதையே நான் கூறினேன். அவ்வளவுதான். சத்ரபதி சிவாஜி மஹாராஜ், சத்ரபதி சம்பாஜி மஹாராஜ் ஆகியோரை பெரிதும் மதிக்கிறேன். எந்த தலைவரையும் அவமதித்து நான் பேசியதில்லை. யார் மனதாவது புண்பட்டிருந்தால், என் கருத்தை திரும்பப் பெறுகிறேன்.
- அபு அசிம் அஸ்மி
சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,