தமிழ் கல்வெட்டுகள் அதிகம் காணப்படும் சம்பகதாமா வெங்கடேஸ்வரர் கோவில் சம்பகதாமா வெங்கடேஸ்வரர் கோவில்
தமிழ் கல்வெட்டுகள் அதிகம் காணப்படும் சம்பகதாமா வெங்கடேஸ்வரர் கோவில் சம்பகதாமா வெங்கடேஸ்வரர் கோவில்
ADDED : செப் 10, 2024 06:33 AM

கர்நாடகாவின் தலைநகராக உள்ள பெங்களூரு, சுற்றுலா தலங்களுக்கு மட்டுமின்றி, ஆன்மிக தலங்களுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது. இங்குள்ள பழமையான கோவில்கள் பக்தர்களை வெகுவாக கவரும் தன்மை உடையவை. இதுபோன்ற ஒரு கோவிலை பற்றி பார்க்கலாம்.
பெங்களூரு பன்னர்கட்டா வனவிலங்கு பூங்காவுக்கு அருகே அமைந்துள்ளது சம்பகதாமா வெங்கடேஸ்வரா சுவாமி கோவில். சோழர்களால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோவில் கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகள் அதிகம் காணப்படுகின்றன. இப்பகுதியில், அதிக சம்பக மரம் இருந்ததால் கோவிலுக்கு, 'சம்பகதாமா' என்று பெயர் வந்துள்ளது.
பாண்டவ வம்சத்தின் வழித்தோன்றலான மகாராஜா ஜனமஜெயா என்பவருக்கு, ஏதோ தீராத நோய் இருந்தது. பல கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்யும்படி முனிவர்கள் கூறினர். அவரும் கோவில், கோவிலாக சென்று தரிசனம் செய்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை.
இறுதியாக சம்பகதாமா கோவிலுக்கு வந்தார். அங்கு உள்ள குளத்தில் குளித்தார். உடனடியாக நோய் குணமானது. பவுர்ணமி தினத்தன்று, இந்த கோவிலின் குளத்தில் ஏராளமான பக்தர்கள் குளிக்கின்றனர். ஆண்டுதோறும் யுகாதி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
கோவிலின் நடை, தினமும் காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரையும் திறந்து இருக்கும். பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து பன்னர்கட்டாவுக்கு அடிக்கடி பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன
. - நமது நிருபர் -