3-வது முறை வேட்பு மனு தாக்கலுக்கு முன் சாமி தரிசனம் : காசி கோவிலுக்கு செல்கிறார் பிரதமர்
3-வது முறை வேட்பு மனு தாக்கலுக்கு முன் சாமி தரிசனம் : காசி கோவிலுக்கு செல்கிறார் பிரதமர்
UPDATED : மே 12, 2024 10:39 PM
ADDED : மே 12, 2024 10:23 PM

வாரணாசி: வாரணாசி தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் 14-ம் தேதி துவங்க உள்ளதை முன்னிட்டு அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்கிறார் பிரதமர் மோடி.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக பொது தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. நான்காம் கட்ட தேர்தல் 13-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி இறுதி கட்டமான 7-வது கட்டமாக வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 14 ம் தேதி துவங்குகிறது. இதற்காக பிரதமர் வாரணாசிக்கு செல்கிறார். பிரதமரை வரவேற்க வாரணாசி தயாராகி வரும் வேளையில் அவர் காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து ரோடு ஷோ நடத்தவும் ஏற்பாடு செய்ய்பட்டு வருகிறது.
இது குறித்து சந்தோலி தொகுதி பா.ஜ., வேட்பாளரும் மத்திய அமைச்சருமான மகேந்திரநாத் பாண்டே கூறுகையில், பிரதமர் மோடி தனது நாடாளுமன்றத் தொகுதிக்காக உழைத்த அளவுக்கு வேறு எந்தப் பிரதமரும் தங்கள் நாடாளுமன்ற தொகுதிக்காக உழைத்ததில்லை என்றார்.
மாநில பாஜ., ஊடக பிரிவு தலைவர் தர்மேந்திர சிங் கூறுகையில், பிரதமரின் ரோடுஷோவில் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'பிரதமர் மோடிக்கு ஆதரவாக என்.டி.ஏ., கூட்டணி ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் வருவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காசியில் பிரதமர் மோடியின் ரோடுஷோவில் 5-10 லட்சம் ஆதரவாளர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று சிங் கூறினார்.
பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 2014, மற்றும் 2019 என இரண்டு முறை போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.காங்., சார்பில் அஜய் ராய் தற்போது மூன்றாவது முறையாகவும் மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார்.
2014-ல் பிரதமர் மோடி உ.பி., மாநிலம் வாரணாசி மற்றும் குஜராத் மாநிலம் வதோதரா தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.