வீணா காசப்பனவர் எதிர்ப்புக்கு மத்தியில் பிரசாரம் துவக்கிய சம்யுக்தா
வீணா காசப்பனவர் எதிர்ப்புக்கு மத்தியில் பிரசாரம் துவக்கிய சம்யுக்தா
ADDED : மார் 23, 2024 11:02 PM

பாகல்கோட்: பாகல்கோட் லோக்சபா தொகுதி காங்கிரஸ் 'சீட்' சம்யுக்தாவிற்கு வழங்கப்பட்டதற்கு, எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர் மனைவி வீணா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ஆனால் எதிர்ப்புக்கு மத்தியிலும் சம்யுக்தா பிரசாரம் துவக்கி உள்ளார்.
பாகல்கோட் மாவட்டம் ஹுன்குந்த் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர். இவரது மனைவி வீணா காசப்பனவர். கடந்த லோக்சபா தேர்தலில் பாகல்கோட்டில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோற்றார். நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலிலும் 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் சிவானந்தா பாட்டீல் மகள் சம்யுக்தாவிற்கு சீட் கிடைத்து உள்ளது.
இதற்கு விஜயானந்த், வீணா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறார். ஆனால் எதிர்ப்புக்கு மத்தியிலும், சம்யுக்தா தனது பிரசாரத்தை துவக்கி உள்ளார்.
பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல், பாகல்கோட் எம்.எல்.ஏ., எச்.ஒய்.மேட்டி, எம்.எல்.சி., உமாஸ்ரீ ஆகியோரை, சம்யுக்தா நேற்று சந்தித்து பேசி, ஆதரவு கேட்டார். அதன்பின்னர் பாகல்கோட் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்களையும் சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து பாகல்கோட்டில் உள்ள மடங்கள், கோவில்களுக்கும் சென்று, சாமி தரிசனம் செய்தனர். நேற்று மதியத்திற்கு மேல் பாகல்கோட் டவுனில் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்தார்.

