திட்டமிட்டே கெஜ்ரிவாலை சிறையில் அடைத்தனர் பா.ஜ., மீது சஞ்சய் சிங் குற்றச்சாட்டு
திட்டமிட்டே கெஜ்ரிவாலை சிறையில் அடைத்தனர் பா.ஜ., மீது சஞ்சய் சிங் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 05, 2024 11:24 PM

புதுடில்லி:''டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் சதித் திட்டம் தீட்டி அதைச் செயல்படுத்தியுள்ளார்,'' என, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கூறினார்.
டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கவர்னர் உத்தரவுப்படி சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரித்து, துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது.
கடும் நெருக்கடி
இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து, மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
அதேநேரத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்குக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமின் வழங்கியது.
சிறையிலிருந்து வெளியே வந்த சஞ்சய் சிங், புதுடில்லி ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக பொய்யான வாக்குமூலம் அளிக்க, ராகவ் மகுண்டாவுக்கு பா.ஜ., கடும் நெருக்கடி கொடுத்தது.
தொடர்பு
ராகவ் மகுண்டாவின் தந்தையும் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் எம்.பி., மகுண்டா ஸ்ரீநிவாசலு ரெட்டியிடம் மீது 2022ம் ஆண்டு செப்டம்பர் 16ல் கெஜ்ரிவாலுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க அவரை வற்புறுத்தினர்.
அவர் மறுத்து விட்டதால், அவரது மகன் ராகவ் ரெட்டியை கைது செய்தனர்.
ராகவ் ரெட்டிக்கு கடும் நெருக்கடி கொடுத்து கெஜ்ரிவாலுக்கு எதிராக வாக்குமூலம் பதிவு செய்தனர். இந்த சதி திட்டத்தை பா.ஜ.,வின் மூத்த தலைவர் ஒருவர்தான் செயல்படுத்தினார்.
பா.ஜ.,வின் மூத்த தலைவர்கள் சிலருக்குத்தான் மதுபான முறைகேட்டில் தொடர்பு உள்ளது. அது விரைவில் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

