சங்கரா மருத்துவமனையின் கண் தான விழிப்புணர்வு போட்டி
சங்கரா மருத்துவமனையின் கண் தான விழிப்புணர்வு போட்டி
ADDED : ஆக 30, 2024 11:58 PM

பெங்களூரு:
சங்கரா கண் மருத்துவமனை சார்பில், கண் பார்வை குறைபாடு உள்ள மாணவர்கள் இடையே கண் தானம் விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.
தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் தேசிய கண் தானம் விழிப்புணர்வு தினத்தை ஒட்டி, பார்வையற்றோருக்கான விளையாட்டு போட்டி, ஹலசூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள சவுத் யுனைடெட் புட்பால் கிளப் மைதானத்தில் நேற்று நடந்தது.
போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் அனுசேத், முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் அனில் அல்டிரின் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் அனுசேத் பேசுகையில், ''கண் தானம் செய்வதன் மூலம் பார்வை இல்லாதவர்கள், இவ்வுலகை காண முடியும்.
''கண்தானம் செய்வதால் பார்வை பெறுபவர், மற்றவர்களை நம்பி இருக்காமல் சுதந்திரமாக வாழ முடியும். அனைவரும் கண் தானம் செய்ய வேண்டுகிறேன்,'' என்றார்.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் அனில் அல்டிரின் பேசுகையில், ''விளையாட்டு மூலம் அனுபவம் பெற்றதை விட, இத்தகைய கண் தானம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.
இவ்விளையாட்டில் ஆர்வமுடன் பங்கேற்றுள்ள இவர்களுடன் நானும் பங்கேற்றது உத்வேகம் அளிக்கிறது,'' என்றார்.
சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் பல்லவி ஜோஷி, யங் இந்தியன் பெங்களூரு அமைப்பின் முகமது ஜாஹ்ரின் ஆகியோர் பங்கேற்றனர்.
மாணவர்கள் இடையே ஓட்டப்பந்தயம், கிரிக்கெட், கால்பந்து, கபடி போட்டிகள் நடத்தப்பட்டன.
மாற்றுத் திறனாளிகளுக்கான சமர்த்தனம் டிரஸ்ட்; மாற்றுத் திறனாளிகளுக்கான தீனோதரா டிரஸ்ட்; மித்ரா ஜோதி, பார்வைற்றோருக்கான ஜோதி சேவா சொசைட்டியை சேர்ந்த மாணவ - மாணவியர்பங்கேற்றனர்.
JPM_7060
சங்கரா கண் மருத்துவமனை சார்பில் நடந்த கண் தானம் விழிப்புணர்வு தின போட்டியில், பார்வையற்ற மாணவியுடன், கண்களை கட்டிக் கொண்டு இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் அனில் அல்டிரின் விளையாடினார். இடம்: சவுத் யுனைடெட் புட்பால் கிளப் மைதானம், ஹலசூரு.