வெல்டிங் வைத்து வாழ்க்கை நடத்தும் கொப்பால் விதவை சாரதா பெடிகர்
வெல்டிங் வைத்து வாழ்க்கை நடத்தும் கொப்பால் விதவை சாரதா பெடிகர்
ADDED : மே 11, 2024 09:45 PM

இளம் வயதில் கணவரை இழந்த பெண்களுக்கு, அடுத்து என்ன செய்வது என்றே தெரியாது. பெற்றோர் அல்லது கணவர் குடும்பத்தினரை சார்ந்து இருப்பர். தைரியமாக முடிவு எடுக்கும் பெண்கள், வேலைக்கு சென்று சாதித்து காட்டியதையும் நாம் பார்த்து இருப்போம். இதுபோல கணவரை இழந்த பெண், லாரிக்கு வெல்டிங் வைத்து வாழ்க்கை நடத்துகிறார்.
கொப்பாலை சேர்ந்தவர் சாரதா பெடிகர், 45. விதவை. லாரிக்கு வெல்டிங் வைக்கும் கடை நடத்துகிறார். கண்ணில் கருப்பு கண்ணாடியை அணிந்து கொண்டு, தீப்பொறி பறக்க சாரதா வெல்டிங் வைப்பதை, லாரி டிரைவர்களும், பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இதுதவிர லாரிக்கு பலகை அடிக்கும் வேலையிலும் கைதேர்ந்தவராக உள்ளார்.
பாரமாக இருக்க...
இதுபற்றி சாரதா கூறியதாவது:
எனது கணவர் பெயர் தேவேந்திரப்பா. லாரிக்கு வெல்டிங் வைக்கும், கடை நடத்தினார். அவர் வேலை செய்வதை, நான் கூர்ந்து கவனிப்பேன். சில நேரத்தில் அவருக்கு உதவியாகவும் இருந்து உள்ளேன். கடந்த 2009 ல் உடல்நலக்குறைவால் கணவர் இறந்து விட்டார். அவர் இறந்த பின்னர் 10 வயது மகள், எட்டு வயது மகனுடன் தனியாக வசித்தேன்.
எனது பெற்றோர் அவர்கள் வீட்டிற்கு, என்னை அழைத்தனர். ஆனால் அவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. வெல்டிங் தொழில் செய்து, பிள்ளைகளை காப்பாற்றலாம் என்று நினைத்தேன். வெல்டிங் பட்டறையில் சென்று அமர்ந்தேன். பெண் என்பதால் சரியாக வெல்டிங் வைப்பாரா என்று, லாரி டிரைவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பலர், வெல்டிங் வைக்காமல் சென்றனர்.
குறைந்தவர்கள் இல்லை
ஆனால் ஒரு சில லாரி டிரைவர்கள், என் மீது நம்பிக்கை வைத்தனர். லாரிகளுக்கு நல்லபடியாக வெல்டிங் வைத்து கொடுத்தேன். இதனால் வெல்டிங் வைக்காமல் சென்ற, லாரி டிரைவர்களும் என்னை தேடி வந்தனர். லாரியில் பலகை அடிக்கவும் கற்று கொண்டேன். சரியான அளவில் பலகையை அறுத்து, லாரியில் அடிக்கிறேன். எனது தொழிலை பார்த்து, லாரி டிரைவர்கள் வியந்து போகின்றனர்.
கஷ்டப்பட்டு சம்பாதித்து மகளை பி.யு.சி., படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்து விட்டேன்.
மகன் ஐ.டி., படித்துவிட்டு, எலக்ட்ரிசியன் வேலைக்கு செல்கிறார். பெண்கள் நினைத்தால் முடியாதது என்று, எதுவுமே இல்லை. ஆண்களுக்கு எந்த விதத்திலும், பெண்கள் குறைந்தவர்கள் இல்லை. தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டால், பெரிய ஆளாக வரலாம் என்பது, பெண்களுக்கு நான் கூறும் சிறிய அறிவுரை.
இவ்வாறு அவர் கூறினார்
.நமது நிருபர் -