ADDED : ஜூன் 27, 2024 06:49 AM

கொப்பால், : ''மாநில காங்கிரஸ் தலைவரான, துணை முதல்வர் சிவகுமாரின் திமிரை அடக்க வேண்டும் என்ற நோக்கில், கூடுதல் துணை முதல்வர் பதவி உருவாக்கும்படி, நெருக்கடி கொடுக்கின்றனர்,'' என கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
இது குறித்து, டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரசில் ஒரு கோஷ்டி, துணை முதல்வர் சிவகுமாரை அரசியல் ரீதியில் கட்டிப்போட, சதி வலை பின்னுகிறது. இவரது திமிரை அடக்கும் நோக்கில், கூடுதல் துணை முதல்வர் பதவி உருவாக்க வேண்டும் என, சித்தராமையா கோஷ்டியை சேர்ந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் வலியுறுத்துகின்றனர். இந்த முயற்சியில் சித்தராமையா வெற்றி பெறுவார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஆளுங்கட்சியில் சிவகுமாருக்கு எதிராக, பல அரசியல் சதிகள் நடக்கின்றன. முதல்வர் சித்தராமையா கட்சி மேலிடத்துக்கு, நெருக்கடி கொடுத்து கூடுதல் துணை முதல்வர் பதவி உருவாக்க கூடும்.
மாநிலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை, தொடர்ந்து உயர்கிறது. மாநில மக்களுக்கு சூடு போடுகின்றனர். கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையை முதல்வர் உயர்த்தினார். இது தொடர்பாக, நாங்கள் கேள்வி எழுப்பினால் அலட்சியமாக பதில் அளிக்கிறார். முதல்வர் ஏன் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறார்.
விதை பொருட்களின் விலை, 40 முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இத்தகைய கஷ்டமான சூழ்நிலையிலும், விவசாயிகளின் கஷ்டங்களுக்கு தீர்வு காணவில்லை. பல வாக்குறுதிகளை அளித்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. முதல்வர் சித்தராமையாவை பார்த்தால், அய்யோ பாவம் என, தோன்றுகிறது.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை. வளர்ச்சி பணிகளுக்கு நிதி தாருங்கள் என, நெருக்கடி கொடுக்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு ஊதியமும்கொடுக்க முடியவில்லை. அனுபவம் மிக்க முதல்வர் சித்தராமையா இருந்தும் கூட, காங்கிரஸ் அரசு மாநிலத்தை கடன் சுழலில் தள்ளுகிறது. மாநிலத்தில் வளர்ச்சி பூஜ்யம்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்துள்ள, 187 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக, நிதித்துறை அமைச்சருமான முதல்வர் சித்தராமையா பொறுப்பேற்க வேண்டும். சாட்சிகளை கலைக்க முற்பட்ட அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், ஆணைய தலைவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.