சதீஷ், லட்சுமி ஹெப்பால்கருக்கு காங்கிரஸ் மேலிடம் கிடுக்கி
சதீஷ், லட்சுமி ஹெப்பால்கருக்கு காங்கிரஸ் மேலிடம் கிடுக்கி
ADDED : மார் 25, 2024 06:45 AM

அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகளை, வெற்றி பெற வைக்கும் பொறுப்பை, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரிடமும், இவரது மகன் மிருணாளை வெற்றி பெற வைக்கும் பொறுப்பை, சதீஷ் ஜார்கிஹோளியிடமும், காங்கிரஸ் ஒப்படைத்துள்ளது.
பெலகாவி மாவட்டம், கர்நாடகாவின் அரசியல் பரபரப்பு மிகுந்த மாவட்டமாகும். ஒவ்வொரு தேர்தலிலும் தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும். இதற்கு முன் பெலகாவி, ஜார்கிஹோளி சகோதரர்களின் கைப்பிடியில் இருந்தது. அரசியலில் இவர்கள் குடும்பத்தினர் கை ஓங்கியிருந்தது.
சகோதரர்களான ரமேஷ் ஜார்கிஹோளி, சதீஷ் ஜார்கிஹோளி, பாலசந்திர ஜார்கிஹோளி, லக்கன் ஜார்கிஹோளி அரசியலில் உள்ளனர். ஆனால் தற்போது சூழ்நிலை மாறியுள்ளது. லட்சுமி ஹெப்பால்கர் குடும்பத்தினர் பெலகாவியில் பிரபலமடைந்துள்ளனர்.
பெலகாவியை தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள, ஜார்கிஹோளி, லட்சுமி ஹெப்பால்கர் குடும்பத்தினர் முட்டி மோதுகின்றனர். மாவட்டத்தில் தங்கள் கையே ஓங்கியிருக்க வேண்டும் என்றும், நினைக்கின்றனர்.
ரமேஷ் ஜார்கிஹோளி இதற்கு முன், காங்கிரசில் இருந்தார். மாநிலத்தில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசில் அமைச்சராகவும் பதவி வகித்தார். பெலகாவி அரசியலில் லட்சுமி ஹெப்பால்கர் தலையிட்டதால், பிரச்னை ஆரம்பமானது. இவரை கட்டுப்படுத்தும்படி மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்தும் பயனில்லை. மாநில காங்., தலைவர் சிவகுமார், லட்சுமி ஹெப்பால்கருக்கு பக்கபலமாக நின்றிருந்தார். இது ரமேஷுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
கொதித்தெழுந்த அவர், தன்னுடன் எம்.எல்.ஏ.,க்களை சேர்த்துக்கொண்டு, கூட்டாக ராஜினாமா செய்ய வைத்தார். காங்., - ம.ஜ.த., கூட்டணி அரசை கவிழ்த்தார். பின், பா.ஜ., அரசு அமையவும் காரணமாக இருந்தார். 2023 சட்டசபை தேர்தலில், பெலகாவியின் கோகாக் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வானார்.
இப்போது சதீஷ் ஜார்கிஹோளி, லட்சுமி ஹெப்பால்கர் இடையே, லடாய் சூடு பிடித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் லோக்சபா தேர்தலில் பெலகாவி தொகுதியில், லட்சுமி ஹெப்பால்கரின் மகன் மிருணாளும், சிக்கோடியில் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்காவும் காங்., வேட்பாளராக களத்தில் உள்ளனர்.
ஒரே கட்சியில் இருந்தாலும், சதீஷ், லட்சுமி ஹெப்பால்கர் எலியும், பூனையுமாகவே சீறுகின்றனர். ஊழல் செய்து சதீஷ் சஸ்பெண்ட் செய்த அதிகாரியை, லட்சுமி ஹெப்பால்கர் வேறு பதவியில் அமர்த்தினார். இதனால் இவரை சதீஷ் பகிரங்கமாகவே கண்டித்தார். வாக்குவாதம் நடந்த உதார்ரணங்களும் உள்ளன. இதில் கட்சி மேலிடம் தலையிட்டு கண்டித்ததால், இருவரும் தங்களின் மனக்கசப்பை மூடி மறைத்து, மவுனமாக உள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் சில வாரங்களே உள்ளன. கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து, சிக்கோடியில் தன் மகள் பிரியங்காவுக்கு சதீஷும், பெலகாவியில் தன் மகன் மிருணாளுக்கு, லட்சுமி ஹெப்பால்கரும் சீட் பெற்றுள்ளனர்.
பெலகாவி, சிக்கோடியில் ஏற்கனவே, பா.ஜ., வலுவாக உள்ளது. இங்கு காங்., வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க, அதிகம் போராட வேண்டும். இந்நிலையில் அமைச்சர்களின் பனிப்போர், மேலிடத்துக்கு கவலை அளித்துள்ளது.
வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதுடன், அமைச்சர்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது.
அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகளை, வெற்றி பெற வைக்கும் பொறுப்பை, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரிடமும், இவரது மகன் மிருணாளை வெற்றி பெற வைக்கும் பொறுப்பை, சதீஷ் ஜார்கிஹோளியிடமும் ஒப்படைத்துள்ளது.
மனதுக்குள் வெறுப்பு இருந்தாலும், அதை காண்பிக்க முடியாது. மிருணாளை சதீஷும், பிரியங்காவை லட்சுமி ஹெப்பால்கரும் வெற்றி பெற வைத்தே ஆக வேண்டும். பொறுப்பை தட்டி கழிக்க முடியாமல், இருவருக்கும் காங்., மேலிடம் கிடுக்கி பிடி போட்டுள்ளது.
இரண்டு அமைச்சர்களும், பகையை மறந்து வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பார்களா என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
.
- நமது நிருபர் -

