பாகிஸ்தானி என கூறுவது மத உணர்வை புண்படுத்தும் குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட்
பாகிஸ்தானி என கூறுவது மத உணர்வை புண்படுத்தும் குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட்
ADDED : மார் 05, 2025 04:18 AM

புதுடில்லி: 'பாகிஸ்தானி என திட்டுவது, மத உணர்வை புண்படுத்தும் குற்றமல்ல' என தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபரை, வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹரிநந்தன் சிங் என்பவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், சில தகவல்களை கேட்டிருந்தார்.
குற்றச்சாட்டு
அந்த தகவல்களை நேரடியாக அவரிடம் வழங்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அந்த தகவல்களுடன் சென்ற அரசு ஊழியரான உருது மொழி பெயர்ப்பாளரை, ஹரிநந்தன் சிங், பாகிஸ்தானி என திட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஹரிநந்தன் சிங் மீது உள்ளூர் நீதிமன்றத்தில், அந்த உருது மொழிபெயர்ப்பாளர் வழக்கு தொடர்ந்தார். அதில், 'பாகிஸ்தானி என என்னை கூறியதன் வாயிலாக, மத உணர்வுகளை ஹரிநந்தன் சிங் புண்படுத்தி விட்டார்' என கூறியிருந்தார்.
இதையடுத்து, அந்த நபர் மீது ஐந்து பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, ஹரிநந்தன் சிங், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அங்கு அவரின் முறையீடு ரத்து செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் ஹரிநந்தன் சிங் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் சதிஷ்சந்திர சர்மா ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து, பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
ஒருவரை பாகிஸ்தானி என கூறியதன் வாயிலாக, அந்த நபரின் மத உணர்வு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. எனவே, குற்றம்சாட்டப்பட்ட ஹரிநந்தன் சிங் மீது, இந்திய தண்டனை சட்டம் 298ன் கீழ் தொடரப்பட்ட குற்ற வழக்கை இந்த அமர்வு தள்ளுபடி செய்கிறது.
வழக்கு பதிவு
அந்த நபரை, தவறான நோக்கத்தில் தான் ஹரிநந்தன் சிங் கூறியுள்ளார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிகிறது. எனினும், அதற்காக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின், 298வது வழக்கு பதிவு செய்ததை இந்த கோர்ட் ரத்து செய்கிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.