எஸ்.பி., அலுவலக வளாகத்தில் மனைவியை கொன்ற ஏட்டு கைது
எஸ்.பி., அலுவலக வளாகத்தில் மனைவியை கொன்ற ஏட்டு கைது
ADDED : ஜூலை 02, 2024 01:46 AM

ஹாசன், கர்நாடகாவில், தன்னை பற்றி புகார் அளிக்க எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்த மனைவியை, கத்தியால் குத்திக் கொலை செய்த ஏட்டு கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், ஹாசனின், கே.ஆர்., புரத்தில் வசிப்பவர் லோகநாத், 42. இவரது மனைவி மமதா, 39. இருவரும் காதலித்து, 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஹாசன் நகர் போலீஸ் நிலையத்தில், லோகநாத் ஏட்டாக பணியாற்றுகிறார். திருமணத்தின்போதே லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் வரதட்சணையாக பெற்றிருந்தார். தற்போது வீட்டுமனை வாங்கி வரும்படி மனைவியை துன்புறுத்தியுள்ளார்; அடிக்கடி தாக்கவும் செய்துள்ளார்.
கணவரின் சித்ரவதையால் வெறுப்படைந்த மமதா, அவர் மீது புகார் அளிப்பதற்காக நேற்று மதியம் ஹாசன் எஸ்.பி., அலுவலகத்துக்கு சென்றார். இதையறிந்த லோகநாத், எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து, மனைவியுடன் தகராறு செய்தார். இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது.
கோபமடைந்த லோகநாத், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மனைவியை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார். எஸ்.பி., அலுவலக போலீசார், மமதாவை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஹாசன் நகர் போலீசார், லோகநாத்தை கண்டுபிடித்து கைது செய்தனர்.
மமதாவின் பெற்றோர் கூறுகையில், 'திருமணத்தின் போதே தங்க நகைகள், ரொக்கம் கொடுத்தோம். இப்போது வீட்டுமனை, பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். கடைசியில் எங்கள் மகளை கொலையும் செய்து விட்டார். அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும்' என்றனர்.