சொத்து வரி செலுத்துவதில் அலட்சியம் வட்டி, அபராதத்துடன் வசூலிக்க திட்டம்
சொத்து வரி செலுத்துவதில் அலட்சியம் வட்டி, அபராதத்துடன் வசூலிக்க திட்டம்
ADDED : ஆக 01, 2024 11:11 PM
பெங்களூரு: தேவையான கால அவகாசம் அளித்தும், சொத்து வரி செலுத்துவதில் அலட்சியம் காண்பித்த, சொத்து உரிமையாளர்களுக்கு பாடம் புகட்ட, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியின் பொருளாதார வளர்ச்சியில், சொத்து வரி முக்கிய பங்கு வகிக்கிறது.
சொத்து வரி வசூலில் இலக்கை எட்ட முடியாமல், அதிகாரிகள் பரிதவிக்கின்றனர்.
சொத்துதாரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், ஏப்ரலில் வரி செலுத்தினால், வரி தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால், அப்போதும் வரி செலுத்துவதில் ஆர்வம் காண்பிப்பது இல்லை. ஏப்ரலை தாண்டினால் அபராதம், வட்டி விதிக்கப்படும்.
தனியார் மட்டுமின்றி, அரசு நிறுவனங்களும் கூட பல ஆண்டுகளாக சொத்து வரி பாக்கி வைத்துள்ளன.
இந்நிறுவனங்கள் வரி செலுத்துவதை ஊக்கப்படுத்தும் நோக்கில், ஓ.டி.எஸ்., எனும் 'ஒன் டைம் செட்டில்மென்ட்' என்ற திட்டத்தை, பெங்களூரு மாநகராட்சி செயல் படுத்தியது.
இதன்படி ஒரே நேரத்தில், வரிபாக்கியை செலுத்துவோரிடம் வட்டியோ, அபராதமோ வசூலிக்கப்படாது. வரி தொகையை மட்டும் செலுத்தினால் போதும்.
இந்த சலுகை நேற்று முன்தினம் முடிந்தது. இன்னும், 3 லட்சம் சொத்துதாரர்கள் வரி செலுத்தவில்லை. இவர்களிடம் வட்டி மற்றும் அபராதத்துடன் வரி வசூலிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ஓ.டி.எஸ்., சலுகையை பயன்படுத்தி, ஒரு லட்சம் சொத்துதாரர்கள் மட்டுமே வரி செலுத்தினர். போதுமான கால அவகாசம் அளித்தும் கூட, 3 லட்சம் சொத்துதாரர்கள் வரி செலுத்தவில்லை. ஓ.டி.எஸ்., சலுகை நேற்று முன்தினம் முடிந்தது. நேற்று முதல் வட்டி, அபராதத்துடன் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.
வரி செலுத்தாதோருக்கு, ஆகஸ்டில் மூன்று கட்டங்களாக நோட்டீஸ் அனுப்பப்படும். முதல் முறை அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இணங்கி வரி செலுத்தினால் அபராதம் மட்டும் வசூலிக்கப்படும். இரண்டாவது நோட்டீசுக்கு பின், வரி செலுத்தினால் வரி தொகையுடன், 15 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
மூன்றாவது நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின், வரி செலுத்தினால் அபராதத்துடன், 25 சதவீதம் வட்டி விதிக்கப்படும்.
மூன்று நோட்டீஸ் அளித்த பின்னரும், வரி செலுத்தாவிட்டால் சொத்துகளை முடக்க ஆலோசிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.