கண்டிப்பு காட்டிய ஆசிரியரை குத்தி கொன்ற பள்ளி மாணவன்
கண்டிப்பு காட்டிய ஆசிரியரை குத்தி கொன்ற பள்ளி மாணவன்
ADDED : ஜூலை 08, 2024 12:08 AM
குவஹாத்தி : அசாமில் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த, பிளஸ் 1 மாணவனை ஆசிரியர் கண்டித்ததால், அவரை பள்ளி மாணவன் கொடூரமாக குத்தி கொலை செய்தான்.
அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் பருவா பெஜவாடா, 55. இவர், அங்கு உள்ள தனியார் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, அவரை அதே பள்ளியில், பிளஸ் 1 படித்து வரும் மாணவன் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினான்.
சக ஆசிரியர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
ஆசிரியர் ராஜேஷ், பிளஸ் 1 மாணவர்களுக்கு நேற்று முன்தினம் வேதியியல் தேர்வு வைத்துள்ளார்.
அதை சரியாக எழுதாத மாணவர் ஒருவரை கண்டித்துள்ளார். மேலும், மாணவரிடம் பெற்றோரை அழைத்து வரும்படி கூறி வகுப்பில் இருந்து வெளியேற்றி உள்ளார்.
வெளியே சென்ற மாணவன் சிறிது நேரம் கழித்து சாதாரண உடையில் வகுப்பிற்கு திரும்பியுள்ளார். அவரை கண்டதும் ஆசிரியர் ராஜேஷ் சத்தம் போட்டுள்ளார்.
அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரின் தலை மற்றும் உடலில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார். இதை வகுப்பில் இருந்த மாணவர்கள் உறுதி செய்துள்ளனர். தற்போது அவரை கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.