ADDED : பிப் 28, 2025 12:45 AM

புதுடில்லி, 'நாட்டின் மிக மோசமான மாநிலமான பீஹாரில் நான் ஏன் பணியமர்த்தப்பட்டேன் என தெரியவில்லை. பீஹார் மக்கள் நாகரிகமற்றவர்கள்' என, 'வீடியோ' வெளியிட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. பீஹாரின் ஜெஹானாபாத் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக, தீபாலி ஷா என்பவர் சமீபத்தில் பணியமர்த்தப்பட்டார்.
இவர் சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியிட்ட 'வீடியோ' அவரது வேலைக்கு வேட்டு வைத்துவிட்டது.
அதில் அவர் பேசியுள்ளதாவது:
கோல்கட்டாவில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பணியாற்ற யாரும் விரும்புவதில்லை. ஆனால், அங்கு செல்லக் கூட நான் தயாராக இருந்தேன். என் துரதிர்ஷ்டம், பீஹாரின் ஜெஹானாபாத் பள்ளியில் என்னை பணியமர்த்திவிட்டனர். நான் என்ன பாவம் செய்தேன்?
நாட்டின் மிக மோசமான மாநிலத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளனர். பீஹார் மக்கள் நாகரிகமற்றவர்கள். இந்த மாநிலத்தை நம் நாட்டில் இருந்து பிரித்துவிட்டால் இந்தியா வளர்ந்த நாடாகி விடும்.
இவ்வாறு அதில் பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, பீஹாரின் சமஸ்திபுர் எம்.பி., சாம்பவி சவுத்ரி பார்வைக்கு சென்றது. ஆசிரியை தீபாலி ஷா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, கேந்திரிய வித்யாலயா சங்க கமிஷனருக்கு அவர் கடிதம் எழுதினார். இதையடுத்து ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.