சுட்டெரிக்கும் கோடை வெப்பம்: ஆய்வு மையம் எச்சரிக்கை
சுட்டெரிக்கும் கோடை வெப்பம்: ஆய்வு மையம் எச்சரிக்கை
ADDED : ஏப் 29, 2024 06:31 AM

புதுடில்லி : நாட்டின் பல்வேறு மாநிலங்களில், 41 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
டில்லி, ஒடிசா, உ.பி., உட்பட பல்வேறு மாநிலங்களில், கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளும்படி, டாக்டர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெரும்பாலான மாநிலங்களில், 41 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருவதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பீஹார், உ.பி., --- மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், 41 - 45 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த நிலை வரும் நாட்களில் தொடரும் என, கணிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், வட கிழக்கு பிராந்தியத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக, ஒடிசாவின் தொழில் நகரமான அங்குலில், 44.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இது, இந்த கோடைக் காலத்தின் அதிகபட்ச வெப்பநிலை ஆகும்.
நாளுக்கு நாள் வெப்ப நிலை அதிகரித்து வருவதால், மதியம் 12:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை பொது மக்கள் அத்தியாவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்; மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
