ADDED : மே 05, 2024 11:26 PM

திருவனந்தபுரம்: கேரளாவில், 'கள்ளக்கடல்' நிகழ்வால் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. சில இடங்களில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால், மக்கள் அவதி அடைந்தனர்.
கேரளா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில், மே 5ம் தேதி இரவு 11:30 மணி வரை, 'கள்ளக்கடல்' நிகழ்வுக்கு வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
எந்த விதமான அறிகுறியுமின்றி, திடீரென கடல் சீற்றம் அடைவது, 'கள்ளக்கடல்' நிகழ்வு என்றழைக்கப்படுகிறது. திருடனை போல சற்றும் எதிர்பாராத தருணத்தில் வருவதால், கள்ளக்கடல் நிகழ்வு எனப்படுகிறது.
இந்நிலையில் நேற்று, 'கள்ளக்கடல்' நிகழ்வால் திருவனந்தபுரத்தில் உள்ள அஞ்சுதெங்கு, பூந்துறை ஆகிய பகுதிகளில், வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதனால், அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், மீன்பிடி படகுகளையும், உபகரணங்களையும் பாதுகாப்பதில், மீனவர்கள் தீவிர அக்கறை காட்டினர்.
இதே போல், கொல்லம் மாவட்டத்தில் முண்டக்கல், ஆலப்பாடு ஆகிய இடங்களிலும், திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கல்லுார், பெரிஞானம் ஆகிய பகுதிகளிலும் கடல் சீற்றம் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.