ADDED : மார் 27, 2024 12:48 AM
புதுடில்லி, நாம் தமிழர் கட்சியினர் தங்களுக்கு படகு சின்னம்ஒதுக்குமாறு விடுத்த கோரிக்கையை, தலைமை தேர்தல் கமிஷன் நேற்று நிராகரித்தது. ஏற்கனவே, ஒதுக்கப்பட்ட ஒலிவாங்கி சின்னத்தை பயன்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலில், ஏற்கனவே பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் கமிஷனிடம் கேட்டார்.
எனினும், அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு, ஒதுக்கப்பட்டது. அச்சின்னத்தைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில், அக்கட்சி சார்பில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி சின்னம் ஒதுக்கப்பட்டது. திரைப்பட பாடல் பதிவிற்கு பயன்படுத்துவதை போன்ற ஒலிவாங்கி படம், தேர்தல் கமிஷனால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மக்கள் மத்தியில் மேடைகளில் பயன்படுத்தும் ஒலிவாங்கி பிரபலமானதாக உள்ளது.
இதனால், கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்ப்புறங்களிலும், ஒலிவாங்கி சின்னத்தால் குழப்பம் ஏற்படும் என, அக்கட்சி கருதுகிறது. எனவே, அதற்கு பதிலாக படகு அல்லது கப்பல் சின்னத்தை வழங்கும்படி தேர்தல் கமிஷனில் விண்ணப்பித்தது.
இதற்கிடையே, நாம் தமிழர் கட்சி சார்பில் விடுக்கப்பட்ட படகு சின்னம் கோரிக்கையை, தேர்தல் கமிஷன் நேற்று நிராகரித்தது. ஏற்கனவே, ஒதுக்கிய ஒலிவாங்கி சின்னத்தையே பயன்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளது.

