கால்வாயில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை தேடும் பணி தீவிரம்
கால்வாயில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை தேடும் பணி தீவிரம்
ADDED : ஜூலை 15, 2024 12:27 AM

திருவனந்தபுரம்:கேரளாவில் பலத்த மழை பெய்தபோது கால்வாயில் நிரம்பிய குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி இரண்டாவது நாளாக நீடிக்கிறது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. அப்போது அங்குள்ள தம்பனுார் ரயில் நிலையம் அருகே உள்ள அமைஞ்சான் கால்வாயில் குப்பை அதிகம் குவிந்ததால் மழைநீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ஜாய், 47, என்ற ஒப்பந்த துப்புரவு தொழிலாளி உட்பட மூவர் அதை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென பாய்ந்து வந்த மழை வெள்ளம் தொழிலாளி ஜாயை கால்வாய்க்குள் இழுத்து சென்றது.
மற்ற தொழிலாளர்கள் முயன்றும் ஜாயை காப்பாற்ற முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு வரை தேடியும் ஜாயை மீட்க முடியவில்லை.
இதை தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக மீட்புப்பணி நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள், 'ஸ்கூபா டைவிங்' எனப்படும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், போலீசார், மாநகராட்சி ஊழியர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர் ஈடுபட்டனர்.
அந்த பாதாள சாக்கடையில் பக்கவாட்டிலும் சிறு, சிறு கால்வாய்கள் செல்வதால், அவரை மீட்பதற்கு வசதியாக கால்வாயில் உள்ள கழிவுகளை அகற்றும் பணி நடக்கிறது.