சிரூர் நிலச்சரிவில் தேடுதல் வேட்டை; 'மழையால் தாமதம்' என அரசு தகவல்
சிரூர் நிலச்சரிவில் தேடுதல் வேட்டை; 'மழையால் தாமதம்' என அரசு தகவல்
ADDED : ஆக 06, 2024 02:05 AM
பெங்களூரு : 'உத்தர கன்னடாவின் சிரூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 11 பேரில், மூன்று பேரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது' என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கடந்த மாதம் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
உத்தர கன்னடா மாவட்டம், சிரூரில், ஜூலை 16ல் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வீடுகள், டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த 11 பேர் சிக்கி உயிரிழந்தனர். காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த இரண்டு லாரிகள், கங்காவலி நதியில் அடித்து செல்லப்பட்டன.
பொதுநல மனு
இது தொடர்பாக, நகர வழக்கறிஞர்கள் மலாயில், சுபாஷ் சந்திரா ஆகியோர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
அதில், 'தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் மீட்பு படையினரை அனுப்ப வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் சரிந்த மண், கற்களை அகற்ற வேண்டும்.
நிலச்சரிவில் சிக்கிய மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்ல உத்தர விட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.
இவ்வழக்கு தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
பணிகள் நிறுத்தம்
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் வாதிடுகையில், ''மீட்பு பணியில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளன. 11 பேரில் எட்டு பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள மூன்று பேரை, 19 நாட்களாக தேடி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்வதால் வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலெர்ட்' விடுத்துள்ளது. இதனால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன,'' என்றார்.
மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிடர் ஜெனரல் சாந்தி பூஷன் வாதிடுகையில், ''மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை, மத்திய அரசு அனுப்பி உள்ளது. தற்போது கங்காவலி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மாநில அரசு மீட்பு பணியை நிறுத்தி உள்ளது,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 'கன மழையிலும் மத்திய, மாநில அரசுகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இம்மனு மீதான விசாரணை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என்றனர்.