'சீட்' அமைச்சர் சிவானந்த பாட்டீலின் மகள் சம்யுக்தா வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்தார்.
'சீட்' அமைச்சர் சிவானந்த பாட்டீலின் மகள் சம்யுக்தா வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்தார்.
ADDED : மார் 22, 2024 07:09 AM

பாகல்கோட்: லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் சார்பில் பாகல்கோட் தொகுதியில் போட்டியிட, வீணா காசப்பனவர், சம்யுக்தா பாட்டீல் மற்றும் ரக்ஷிதா ஆகிய மூன்று பெண் தலைவர்கள் முட்டி மோதினர். இதில், அமைச்சர் சிவானந்த பாட்டீலின் மகள் சம்யுக்தா வெற்றி பெற்று, வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்தார்.
கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரஸ், லோக்சபா தேர்தலுக்கு தயாராகிறது. எதிர்க்கட்சியான பா.ஜ., 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, காங்கிரசில் ஏழு தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் அக்கட்சி தலைவர்கள் திணறினர். சில தொகுதிகளில் சீட்டுக்கு, அரை டஜன் தலைவர்கள் துண்டு போட்டனர். சீட்டுக்கு கடும் போட்டி ஏற்பட்ட தொகுதிகளில், பாகல்கோட் தொகுதியும் ஒன்றாகும்.
இங்கு மூன்று பெண்களுக்கிடையே, சீட்டுக்கு இழுபறி ஏற்பட்டது. கடந்த லோக்சபா தேர்தலில், மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வீணா காசப்பனவர், காங்., வேட்பாளராக போட்டியிட்டு தோற்றார். இம்முறையும் தனக்கு சீட் வேண்டும் என கோரினார்.
இவருக்கு போட்டியாக, மாவட்ட மகளிர் காங்., தலைவர் ரக்ஷிதா, சர்க்கரை துறை அமைச்சர் சிவானந்த பாட்டீலின் மகள் சம்யுக்தாவும், சீட்டுக்கு முட்டி மோதினர். வீணாவின் கணவர் விஜயானந்த காசப்பனவர், ஹுன்குந்த் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக பதவி வகிக்கிறார். அது மட்டுமின்றி வீரசைவ லிங்காயத்து வளர்ச்சி கார்ப்பரேஷன் தலைவராகவும் இருக்கிறார். மனைவிக்கு சீட் தாருங்கள் என, முதல்வர் சித்தராமையா உட்பட, பல தலைவர்களை சந்தித்து நெருக்கடி கொடுத்தார்.
மற்றொரு பக்கம், சர்க்கரை துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல், தன் மகள் சம்யுக்தாவை களமிறக்கும்படி, மேலிட அளவில் காய் நகர்த்தினார். மாவட்டத்தின் சில தலைவர்களும், இவருக்கு ஆதரவாக நின்றனர்.
சிவானந்த பாட்டீலின் சொந்த மாவட்டம் விஜயபுரா. இந்த தொகுதி எஸ்.சி., பிரிவுக்கு ஒதுக்கப்பட்டதால், பாகல்கோட்டில் மகளுக்கு சீட் பெற போராடினார்.
இந்நிலையில், காங்., கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியானது. இதில், பால்கோட்டில் சம்யுக்தா பாட்டீல் பெயர் இடம்பெற்றது. இதனால், சீட்டுக்கு முட்டி மோதிய வீணா, ரக் ஷிதா தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது. இவர்கள், சம்யுக்தாவுக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

