'செபி' மாதவி சீனாவில் முதலீடு காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு
'செபி' மாதவி சீனாவில் முதலீடு காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு
ADDED : செப் 15, 2024 12:02 AM

புதுடில்லி:பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியில், தலைமை பதவியில் இருந்தவாறே, 36.90 கோடி ரூபாய் மதிப்பில் பங்குகளில் மாதவி புரி புச் முதலீடு செய்திருப்பதாக காங்கிரஸ் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்., செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறியதாவது:
செபி தலைவர் மாதவி, கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், மொத்தம் 19.54 கோடி ரூபாய்க்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். உள்நாட்டில் மட்டுமின்றி; சீனா உட்பட பல வெளிநாட்டு நிதி திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளார்.
தன் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து மாதவி அறிவித்தது எப்போது? சீனாவுடன் இந்திய உறவு பாதித்துள்ள நிலையில், அந்நாட்டில் மாதவி முதலீடு செய்துள்ளது குறித்து அரசுக்கு தெரியுமா?
இவ்வாறு பவன் கேரா கூறினார்.
இதற்கிடையே, அகோரா ஆலோசனை நிறுவனம் வாயிலாக, மஹிந்திரா, பிடிலைட், டாக்டர் ரெட்டீஸ் நிறுவனங்களுக்கு ஆலோசனை அளித்ததற்காக பணம் பெற்றதாக கூறப்பட்ட புகார்களை, மாதவி மற்றும் அவரது கணவரும் மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். செபி தலைவரான பின், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியிடம் இருந்து வருவாய் ஈட்டியதாக கூறப்பட்ட புகாரையும் மறுத்தனர்.
இது தொடர்பாக, மாதவி மற்றும் அவரது கணவர் வெளியிட்ட அறிக்கையை நிராகரிப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, மஹிந்திரா குழுமம் வெளியிட்ட விளக்கங்கள் போதுமானதாக இல்லை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.