ADDED : ஆக 29, 2024 01:06 AM
புதுடில்லி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுவது போல், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவே, நாட்டின் உச்சபட்ச பாதுகாப்பு நடைமுறையாக உள்ளது. இதற்கு அடுத்ததாக, 'இசட் பிளஸ்' உடன் ஏ.எஸ்.எல்., எனப்படும், 'அட்வான்ஸ்டு செக்யூரிட்டி லைசன்' என்ற பாதுகாப்பு நடைமுறை உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், காங்., முன்னாள் தலைவர் சோனியா, அக்கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா ஆகியோருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இந்த வரிசையில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்துக்கும் இசட் பிளஸ் உடன், ஏ.எஸ்.எல்., அடங்கிய கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பா.ஜ., ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு மோகன் பகவத் சென்றபோது, அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் எழுந்ததாகவும், இது தவிர அவருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவு அமைப்பினர் அளித்த தகவலின்படியும், இந்த கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.