ADDED : ஜூலை 14, 2025 03:20 AM
புதுடில்லி:வடகிழக்கு டில்லி சீலம்பூர் வெல்கம் காலனியில், நான்கு மாடி கட்டடம் இடிந்து, ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சீலம்பூர் வெல்கம் காலனியில் நேற்று காலை, 7:00 மணிக்கு, நான்கு மாடி கட்டடம் இடிந்து கட்டட உரிமையாளர் அப்துல் மத்லுாப், 50, அவரது மனைவி ரபியா, 46, மகன்கள் ஜாவேத், 23, அப்துல்லா, 15, மகள் ஜூபியா, 27, பேத்தி போஷியா, 2, ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
மத்லுாப்பின் மகன்கள் பர்வேஸ், 32, நவேத், 19, பர்வேஸ் மனைவி சிசா, 21, அஹமது, 1, மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் நான்கு பேர் உட்பட எட்டு பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கவுதம்புரியில் வசித்த அப்துல் மத்லுாப் குடும்பம், அந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால், சீலம்பூருக்கு கடந்த ஆண்டு குடிவந்தனர் என்பது தெரிய வந்துள்ளது.