சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல் ஜம்மு - காஷ்மீரில் அசம்பாவிதம் தவிர்ப்பு
சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல் ஜம்மு - காஷ்மீரில் அசம்பாவிதம் தவிர்ப்பு
ADDED : ஏப் 18, 2024 01:07 AM
ஜம்மு, லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நேரத்தில், ஜம்மு - காஷ்மீரின் எல்லை பகுதியில் சக்தி வாய்ந்த மூன்று வெடிகுண்டுகளை, பாதுகாப்புப் படையினர் நேற்று கண்டறிந்து செயலிழக்கச் செய்தனர். இதன் வாயிலாக பெரும் அசம்பாவித சம்பவங்கள் தடுக்கப்பட்டன.
பாதுகாப்பு காரணங்களால், ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஐந்து லோக்சபா தொகுதிகளுக்கும், தலா ஒன்று என்ற வீதத்தில் ஐந்து கட்டங்களாகவும், யூனியன் பிரதேசமான லடாக் லோக்சபா தொகுதிக்கு வரும் மே 20ம் தேதியும் தேர்தல் நடத்தப்பட உள்ளன. இதன்படி, அங்குள்ள ஒரு தொகுதிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இந்நிலையில், நம் அண்டை நாடான பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பூஞ்ச் மாவட்டத்தின் சானாய்குர்சாய் அருகே உள்ள வனப்பகுதியில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஆள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள குகைக்குள் சோதனையிட்ட போது, பூமிக்கு அடியில் தனித்தனி டப்பாவில் மூன்று சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து, பாதுகாப்புப் படையினர் அகற்றினர். அதன்பின், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அவற்றை செயலிழக்கச் செய்தனர்.
அகற்றப்பட்ட வெடிகுண்டுகள் முறையே 5 கிலோ, 10 கிலோ, 20 கிலோ எடையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், மிகப்பெரிய அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், அப்பகுதி முழுதும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

