கேரள- தமிழக எல்லையில் ரூ.14 லட்சம் பறிமுதல்: தேர்தல் நடத்தை விதி மீறல்
கேரள- தமிழக எல்லையில் ரூ.14 லட்சம் பறிமுதல்: தேர்தல் நடத்தை விதி மீறல்
ADDED : ஏப் 23, 2024 12:54 PM

திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தல் நடத்தை விதிகளை மீறி, கேரளா - தமிழக எல்லையில் உள்ள வாளையார் சோதனை சாவடியில் பஸ்சில் உரிய ஆவணம் இன்றி, கொண்டு செல்லப்பட்ட ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. முன்னதாக, பணப் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு சென்றால், பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
''தேர்தல் முடிந்த பிறகு, பறக்கும் படை மாற்றப்படும். கேரளா, கர்நாடகா, ஆந்திரா தேர்தல்கள் முடியும் வரை, எல்லையில் மட்டும் பறக்கும் படை செயல்படும்'' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து இருந்தார்.
சோதனை
இந்நிலையில், கேரளா-தமிழக எல்லையில் உள்ள வாளையார் சோதனை சாவடியில் கேரள போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பஸ்சில் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்த எர்ணாகுளத்தை சேர்ந்த வினோ என்பவர் அவரது ஆடையில் ரகசிய அறைகள் தயார் செய்யப்பட்டு அவற்றிற்குள் பணம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
விதி மீறல்
பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இன்றி கொண்டு சென்றதால் கருப்பு பணம் கடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். லோக்சபா தேர்தல் நடத்தை விதிகளை மீறி, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு சென்றதால், அவர் மறைத்து வைத்திருந்த 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

