ADDED : மார் 04, 2025 11:19 PM
பாலக்காடு; பாலக்காடு அருகே, கோட்டாயி பார்த்தசாரதி கோவிலில் செம்பை ஏகாதசி சங்கீத உற்சவம், வரும் 8ம் தேதி துவங்குகிறது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில்.
இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் ஏகாதசி உற்சவம் நடப்பது வழக்கம். செம்பை குடும்பத்தினர் நடத்தும் இந்த உற்சவம் பிரசித்தி பெற்றது.
நாளை, 6ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. தந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு தலைமை வகிக்கிறார். வரும், 8ம் தேதி மாலை, 6:00 மணிக்கு பிரபல இசைக்கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணன் சங்கீத உற்சவத்தை துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து, சுகுமாரி நரேந்திரமேனனின் சங்கீதக் கச்சேரி நடக்கிறது.
வரும், 9ம் தேதி மாலை, 6:00 மணிக்கு நந்தினி மற்றும் ஆனயடி பிரசாத் ஆகியோரின் சங்கீதக் கச்சேரி நடக்கிறது. 10ம் தேதி காலை, 8:30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை, 10:00 மணிக்கு மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை, 11:00 மணிக்கு இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடக்கிறது.
அன்று, மாலை, 6:00 மணிக்கு பத்மேஷின் புல்லாங்குழல், பாதிரியார் பாள் பூவத்திங்கள், பிரகாஷ் உள்ளியேரி குழுவின் ஹார்மோனியம், இரவு, 8:30 மணிக்கு விஜய் ஜேசுதாஸ், 9:30க்கு அனூப், பார்வதி திலீப் ஆகியோரின் வயலின் கச்சேரிகள் நடக்கிறது.
வரும், 11ல் ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது. உற்சவத்தின் நிர்வாகி செம்மை சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் கீழத்தூர் முருகன், கோவில் நிர்வாகத்தினர், இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.