ADDED : ஆக 29, 2024 02:11 AM

பாலக்காடு:செம்பை வைத்தியநாத பாகவதரின், 128வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பாலக்காட்டில் இரண்டு நாட்கள் சங்கீத உற்சவம் 31ம் தேதி துவங்குகிறது.
பாலக்காடு செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில், 31ம் தேதி மாலை 5:30 மணிக்கு கேரள உயர் நீதிமன்ற நீதிபதி குஞ்சிகிருஷ்ணன், விழாவை துவக்கி வைக்கிறார். தொழிலதிபர் சித்திக் அகமது சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
தொடர்ந்து, மாலை 6:25க்கு அபிராம் உண்ணி குழுவினரின் சங்கீத கச்சேரி நடக்கிறது. செப்., 1, காலை 8:15 மணி முதல் இசைக் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து, 11:45 மணிக்கு செம்பை வித்ய பீடத்தின், 38வது ஆண்டு மாநாட்டை, கேரளாவின் ஆலத்துார் எம்.பி., ராதாகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்.
தரூர் தொகுதி எம்.எல்.ஏ., சுமோத் தலைமை வகிக்கிறார். பாலக்காடு எம்.பி., ஸ்ரீகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
தொடர்ந்து மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி குழுவினரின் கச்சேரி நடக்கிறது. இரண்டு நாட்கள் நடக்கும் சங்கீத ஆராதனையில், 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை, செம்பை வித்யா பீடம் தலைவர் செம்பை சுரேஷ், செயலர் கீழத்துார் முருகன் செய்துள்ளனர்.

