செம்பை வைத்தியநாத பாகவதர் 2 நாள் சங்கீத உற்சவம் நிறைவு
செம்பை வைத்தியநாத பாகவதர் 2 நாள் சங்கீத உற்சவம் நிறைவு
ADDED : செப் 02, 2024 03:52 AM

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை கிராமம். இங்கு வாழ்ந்த செம்பை வைத்தியநாத பாகவதர், தன் வாழ்க்கையை இசைக்காக அர்ப்பணித்தவர். அவரது பிறந்த நாள் விழா, ஆண்டு தோறும் சங்கீத உற்சவத்துடன் கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு இரு நாட்கள் சங்கீத உற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது. விழாவை கேரள உயர் நீதிமன்ற நீதிபதி குஞ்சிகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தொடர்ந்து இளம் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று காலை, 8:15 மணி முதல் இசைக்கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, 11:45 மணிக்கு, செம்பை வித்யாபீடத்தின், 38வது ஆண்டு மாநாட்டை, ஆலத்துார் தொகுதி எம்.பி., ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசியதாவது:
செம்பை வைத்தியநாத பாகவதர் ஜாதி, மத எல்லையின்றி இசையை கற்றுக்கொடுத்த மாபெரும் மனிதர்.
இசை மற்றும் இலக்கியம் உள்ளவர்களால் தான் நல்லது செய்ய முடியும். அவர்கள் தங்கள் சொந்த லாபத்தை விட, சமூகத்தின் நன்மைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் செண்டை மேளம் வித்வான் கல்லுார் ராமன்குட்டி மாரார் கவுரவிக்கப்பட்டார். உற்சவ கமிட்டித்தலைவர் செம்பை சுரேஷ், செயலர் கீழத்துார் முருகன் பேசினர்.
மாலை, 5:30 மணிக்கு மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி குழுவினரின் நிறைவு சங்கீதக் கச்சேரி நடந்தது.
வினோத் பழயன்னுார் -- வயலின், ஆலுவா கோபாலகிருஷ்ணன் - மிருதங்கம், நாராயணன் - கடம், வெள்ளிநேழி ரமேஷ் - முகர்சங் ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.